என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை"

    • தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
    • மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.

    தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

    அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

    நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

    • இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
    • இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது.

    கொழும்பு:

    இலங்கை அதிபர் அனுரா திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 5-ந்தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அனுரா திசநாயகே தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறும்போது, இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மகிந்த ஜெயதிஸ்ச கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.

    இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகா வாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார வாரியம், இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.

    • தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார். 

    • முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    • 2015-ல் இருந்து 4-வது முறையாக இலங்கை செல்ல இருக்கிறார்.
    • இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.

    இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கை செல்ல இருப்பதாக என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.

    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியா வந்திருந்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது உறுதி செய்யப்பட்டது.

    நாங்கள் அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எங்களுடைய முதல் மூலோபாய சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இருநாடுளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. தேசிய நலனை பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம் என விஜிதா ஹெராத் தெரிவித்துள்ளார்.

    2023 ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் NTPC-யும் கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடி பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 4-வது முறையாக இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ராய்ப்பூர்:

    சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கைபந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ராம்தின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பிரையன் லாரா 41 ரன்னும், சாட்விக் வால்டன் 31 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்டும், டுவெயின் ஸ்மித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இறுதி ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது.
    • தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்று அமைச்சர் கூறினார்.

    கொழும்பு:

    இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.

    இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக்கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

    தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார். ஓடுபாதையை விரிவாக்கம் செய்யும் பணிகள் செய்யவேண்டியிருப்பதாகவும், தற்போதுள்ள ஓடுபாதையில் 75 இருக்கை கொண்ட விமானங்களை மட்டுமே கையாள முடியும் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என 2019ல் பெயர் சூட்டப்பட்டது. முதல் சர்வதேச விமானம் சென்னையில் இருந்து வந்து தரையிறங்கியது. 2019ல் இந்தியா மற்றும் இலங்கை இணைந்து இந்த விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்தது. முன்னதாக, இந்தியாவின் அலையன்ஸ் நிறுவனம், சென்னையில் இருந்து பலாலிக்கு வாரந்தோறும் மூன்று விமானங்களை இயக்கியது.

    2019 நவம்பரில் இலங்கையின் ஆட்சிமாற்றத்திற்குப் பின்னர், விமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
    • இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது.

    இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது.

    இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

    இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய விமானங்களை இயக்கி வந்தது.

    இதற்கிடையே கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு பரவியது. இதைத்தொடர்ந்து சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

    தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

    ஏற்கனவே விமான சேவைகளை இயக்கி வந்த அலையன்ஸ் ஏர் நிறுவனம், சென்னை- யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவைகளை தொடங்கி உள்ளது.

    இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 64 இருக்கைகள் உடைய சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் இன்று மிகவும் குறைவான பயணிகளாக 12 பேர் மட்டுமே சென்றனர். முதல் விமானம் காலை 10.15 மணிக்கு தாமதமாக யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு சென்றது.

    வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு இருந்த யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகள், தற்போது திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    காலை 9.25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைகிறது. மீண்டும் காலை 11.50 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பகல் 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது.

    சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் இலங்கையில் அதிகமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கும், இந்த விமான சேவைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
    • கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.
    • வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கொழும்பு :

    வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன.

    கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.

    கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மூவர் காயமடைந்தனர்.

    வெள்ளம் காரணமாக கண்டி-மாத்தளை சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. எனவே மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

    மத்திய இலங்கையின் சில பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது.

    4 மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தொடர் கனமழையால் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆறுகளுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை வழியாக நகர்ந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசும்.

    அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    கொழும்பு:

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தப் படுவதாக இலங்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இலங்கை கடற்கரை பகுதிகளில் போதை பொருள் தடுப்பு போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். ஆட்டோவில் வைக்கப்பட்டி ருந்த பெட்டி, பைகளில் ஐஸ் பெட்டிகள் இருந்தன. அவைகளை சோதனை செய்த போது ஐஸ் போதை பொருள் என்பது தெரிய வந்தது.

    போதைப் பொருள் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் பிரபல போதை பொருள் கடத்தல் காரர் என்று போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    இந்த போதைப் பொருள், தமிழகத்தின் வேதாரண்யத்தில் இருந்து பைபர் படகில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நடுக்கடலில் இலங்கையைச் சேர்ந்த படகுக்கு போதைப் பொருள் மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து இலங்கையின் கல்பட்டி பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் படகில் இருந்து ஐஸ் போதை பொருளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

    போதைப் பொருள் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றும், வேதாரண்யத்தில் இருந்து கடத்தி யது யார்? ஆகியவை குறித்து விசாரணை நடக்கிறது.

    • இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
    • உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடன் உதவி பெற்று இலங்கை அரசு நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.

    இதற்கிடையே இலங்கையில் வருகிற மார்ச் 9-ந்தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாக்கு சீட்டு அச்சடிக்கவும், வாகனங்களுக்கு எரிபொருள் மற்றும் வாக்குசாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு நிதி வழங்க கருவூலம் மறுத்து விட்டது. போதுமான பணம் இல்லாததால் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் கூறும்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்திருந்தேன். ஆனால் தேவையான நிதியை அரசாங்கம் விடுவிக்காததால் தேர்தலை எங்களால் நடத்த முடியாது என்று தற்போது கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன் என்றார்.

    இதனால் இலங்கை உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

    இந்த தேர்தலுக்கு சுமார் ரூ.228 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் அத்தியாசிய சேவைகளை வழங்குவதற்கு அரசு வருமானம் போதுமானதாக இல்லாததால் தேர்தல் சாத்தியமற்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×