என் மலர்
நீங்கள் தேடியது "மதிமுக"
- தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.
- மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் சிங்கள அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் மீன்துறை அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது நள்ளிரவு அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிளிண்டன், பேதுரு, வினிஸ்டன், தயான், மரியான், தாணி, ஆனஸ்ட் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமைப் பெற்றுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும், கைது செய்து இலங்கை சிறைகளில் அடைப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மத்திய பா.ஜ.க அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் சிங்கள அரசு இந்த அட்டூழியங்களை தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும்.
- தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து உள்ளது. ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு நிதிகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காத நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி குறித்து அதன் தலைவர் அண்ணாமலை கனவு கண்டு கொண்டிருக்கிறார். அது பலிக்காது. தமிழக மக்கள் மதவாத சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். மதவாத சக்திகளுக்கு எதிராகவே தமிழக மக்களின் செயல்பாடு இருக்கும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி வளர முயற்சிக்கிறது. கவர்னர் மக்களுக்காக செயல்படவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசின் ஊது குழலாக செயல்பட்டு வருகிறார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ம.தி.மு.க.வின் கூட்டணியும் தொடரும். தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கலாச்சாரம் வேர் ஊன்றி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி, பருப்பு கொள்முதல் செய்ததில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதை மட்டும் வைத்து குற்றம் நடந்ததாக கூறிவிட முடியாது. இது பற்றி விசாரணை முடிந்த பின்னர் தான் பதில் சொல்ல முடியும்.
மதிமுக பூரண மதுவிலக்கு கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க போவதில்லை. தமிழக முதல் அமைச்சரின் முயற்சியால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன, புயல் மழை காலங்களில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் மக்களுக்கு உடனடியாக தங்குமிடம் நிவாரணம் போன்றவை அளித்தது பாராட்டக்கூடியது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விலைவாசியும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு மாட்டுத்தீவனம் மற்றும் யூரியா விலையை குறைக்கவில்லை.
பாரத பிரதமர் மோடியின் பேச்சை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகளுக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர்.
சென்னை:
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று பாராளுமன்ற மேல் சபையில் நேரமில்லா நேரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர். மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அண்மைக்காலமாக படகுகளை கைப்பற்றி, ஏலத்தில் விட்டுவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த இடைவிடாத துன்புறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை:
ம.தி.மு.க. மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், தலைமைக்கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடந்தது.
துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தொடக்க உரை ஆற்றினார். தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் மாநில ஆளுநர் பொறுப்புகள் தேவையில்லை என்பதை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டுவர வேண்டுமென ஒன்றிய அரசையும், அனைத்துக் கட்சிகளையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
பட்டியல் இன மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கு மான இடஒதுக்கீடு ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் முறையாக நிரப்பப்படாமல் இருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை ஒன்றிய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மிக பண்பாக நடந்து கொண்டார்.
- ஆளுநர் நாட்டுப்பண் முடிவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார்.
நெல்லை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லை ரெட்டியார்பட்டியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட முறை இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநரும் நடத்தாத ஒன்று. ஆளுநர் அநாகரீகமான செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை உடனே வெளியேற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் கொள்கைகள், சாதனைகளை மக்களுக்கு அறிவிக்கும் உரை தான் ஆளுநர் உரை. அப்படிப்பட்ட உரையை வாசிக்காமல் அவராகவே சிலவற்றை சேர்த்து வாசித்து விட்டு அந்த உரைக்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்ததாக அபண்டமான பொய்யை ஆளுநர் வட்டாரம் சொல்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட வேண்டும். ஆளுநர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அதை செய்யாவிட்டால் மத்திய அரசும் ஆளுநரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருக்கிறது என்று அர்த்தம்.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 212-ன் படி சட்டமன்ற நடவடிக்கையில் நீதிமன்றமே தலைமுடியாது என நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் ஆளுநர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த 21 மசோதாக்களில் கையெழுத்து போடாமல் உள்ளார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வேண்டுமென்று பலர் கூறுகின்றனர். 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். நேற்று கூட நெல்லை பணகுடியில் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை தடை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாமல் ஆன்லைன் ரம்மி நடத்துபவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுக்கிறார்.
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மிக பண்பாக நடந்து கொண்டார். ஆனால் அதை மதிக்காமல் ஆளுநர் நாட்டுப்பண் முடிவதற்கு முன்பே அவையிலிருந்து வெளியேறினார். ஆர். எஸ். எஸ். சங்பரிவாரின் கருவியாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அண்ணா பிறந்தநாளில் சேது சமுத்திரம் திட்டத்தை அறிவிக்க வைத்தேன். அதன் பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்று இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வருகிறார்கள் என்றால் அதைவிட தித்திப்பான செய்தி எதுவும் இல்லை. எனவே முதல்-அமைச்சரை மனதார பாராட்டுகிறேன்.
தமிழக பிரதிநிதிகள் ஆளுநரை மாற்ற கோரி குடியரசுத் தலைவரை சந்தித்திருப்பதால் நியாயம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆளுநரை மத்திய அரசு இயக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது.
- தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
கம்பத்துக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. 678 கிராமங்களில் தான் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு எடுத்த முயற்சிகளை தடுப்பதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி உள்ளேன்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்காக இடைவிடாது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், நடைபயணம் உள்ளிட்ட கம்பம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக பாடுபட்டுள்ளேன். மேலும் தற்போது கேரளாவைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கருத்தினை கூறி வருகிறார்.
அவ்வாறு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது. 5 மாவட்டங்கள் பாலைவனமாகும். அதேபோன்று தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனை தடுப்பதற்கு தென்மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன்.
இந்த நியூட்ரினோத் திட்டம் செயல்பட்டால் அம்பரப்பர் மலைக்கு மட்டும் ஆபத்தல்ல. அருகில் உள்ள இடுக்கி அணைக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.
எனவே நியூட்ரினோ பிரச்சினைக்காகவும், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கவும் நான் மீண்டும் வருவேன். மக்களை சந்திப்பேன். விவசாயிகளுடன் சேர்ந்து அதனை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.
மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில், நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதாவது, சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி., தொகுதிளில் ஒவ்வொரு 25 இடங்களில் ஒரு இடத்திலாவது வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை அல்லது 2 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். எந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பதிவு செய்யாவிட்டால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
இதேபோன்று தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்த பட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதுடன், 4 மக்களவைத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தியானால், தேசிய கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தால், தேர்தலின் போது அந்த கட்சி மற்றும் அதன் வேட்பாளருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய வாதகாங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்தன.
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.,பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஆணை யம் அண்மையில் வெளியிட்ட உத்தரவால், தமிழகத்திலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இருந்து சில கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
அதேசமயம், தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
தேசிய கட்சிக்கான அந்தஸ்து பட்டியலிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாநிலக் கட்சிக்கான அந்தஸ்து பட்டியலில் அந்தக் கட்சி இடம் பெற்றுள்ளது.
இதன்மூலம், மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., ஆம்ஆத்மி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தேர்தல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாநில கட்சிகளாக உள்ள பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 8 சதவீத வாக்குகளுக்கும் குறைவாக பெற்று வரும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இன்னும் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை பெறாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை பேசினார்.
- முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.
சென்னை:
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயளலார் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக கூறி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.
மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது.
இவ்வாறு திருப்பூர் துரைசாமி கூறி உள்ளார்.
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.
- வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க.வில் உட்கட்சிக்கு உள்ளேயே எழுந்துள்ள அதிருப்தி கட்சியை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடலாம் என்ற கோரிக்கையாக உருவெடுத்து உள்ளது.
இது தொடர்பாக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதல் பணியாற்றி வரும் திருப்பூர் துரைசாமி வைகோவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அவரே அதிருப்தி அடையும் அளவுக்கு கட்சியின் நிலைமை மாறி இருக்கிறது.
தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்ட பிறகு கட்சியில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்ற பொருமல் இருந்து வருகிறது.
ஏற்கனவே கடந்த ஆண்டு வைகோவின் முடிவுகளை எதிர்த்த மாவட்டச் செயலாளர்கள் செவந்தியப்பன் உள்பட 3 பேர் நீக்கப்பட்டார்கள்.
தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் துரை வைகோ ஆதரவாளர்களை வெற்றி பெற செய்ய வேலைகள் நடப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். வைகோ அனுமதித்த வேட்பாளரை தோற்கடிக்க துரை வைகோ ஆதரவாளர் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
இப்படி கட்சிக்குள் எழுந்துள்ள மனக்கசப்பும் அதிருப்தியும் வைகோவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த நிலையில் தான் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியை தி.மு.க.வுடன் இணைந்து விடலாம் என்று கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் தன்னிச்சையான நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டு வரும் நிலை குறித்து விரிவான கடிதங்களை எழுதியிருந்தேன். அதற்கு இன்று வரை தங்களால் பதிலேதும் சொல்ல இயலவில்லையா?
லட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த தி.மு.க.வில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும் தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி தி.மு.க.விற்கே சென்றுவிட்டனர்.
தங்களின் அண்மைகால நடவடிக்கைகளால் ம.தி.மு.க.விற்கும், தங்களுக்கும் தமிழக மக்கள் மத்தியில் அவப்பெயரும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதனை அறிந்த கழக தோழர்கள், தமிழகம் முழுவதும் பழைய கழக உறுப்பினர்களே தங்களை புதுப்பித்து கொள்ள முன்வராத நேரத்தில் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பதில் கழக தோழர்களிடம் தொய்வும், ஆர்வமும் குறைந்து உள்ளதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பட்ட சிரமங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ம.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டியுள்ளது. இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை ம.தி.மு.க.விற்கு எத்தனை தொகுதி ஒதுக்குவார்கள் என்று தெரியாத நிலையில், விருதுநகர் மாவட்ட கழகம் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் பெயரை குறிப்பிட்டு போட்டியிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அவருக்கே திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்ட கழக தோழர்களிடம் சொல்லி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறு மலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க்கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது.
வைகோவின் பதிலை பொறுத்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று அதிருப்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் துரைசாமியின் கடிதத்துக்கு தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்துள்ளார். அதில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது கடிதத்தை புறந்தள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
- திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம்.
திருப்பூர்:
திருப்பூர் துரைசாமியின் கடிதத்துக்கு துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திருப்பூர் துரைசாமி முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கிடையில் திருப்பூர் துரைசாமி ம.தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் மூத்த நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவரிடம் துரை வைகோவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. வைகோ பதில் சொன்னால் பதில் சொல்லலாம். அவர் குற்றச்சாட்டு சொன்னாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தேவையில்லாமல் மற்றவர்களின் கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல தயாரில்லை என்றார்.
- ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது.
- தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்.
மதுரை:
மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று தலைமை கழகத்திற்கு அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருப்பது கண்டனத்திற்குரியது. ஆரம்ப காலம் முதலே அவர் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களை தான் கூறி வருகிறார். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும் ம.தி.மு.க.வுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது.கட்டுப்பாடான கொள்கை கொண்ட கட்சி ம.தி.மு.க.
தி.மு.க.வுடன் ம.தி.மு.க.வை இணைப்பது தொடர்பான திருப்பூர் துரைசாமியின் கடிதத்தை ம.தி.மு.க.வினர் முழுமையாக புறக்கணிக்க வேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயத்தை பொது வெளியில் வெளியிடுவது முறையல்ல.
வாரிசு அரசியல் என்று அவர் குறிப்பிடுவது முறையற்ற கருத்தாகும். தலைமை நிலைய செயலாளராக துரை வைகோவை தேர்ந்தெடுப்பதற்கு வைகோ விரும்பவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு சம்மதத்தோடுதான் கட்சியின் விதிப்படிதான் அவர் தலைமை நிலைய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அந்த பதவிக்கு பொறுப்பானவர்தான்.இதில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. கட்சி தலைமைக்கு அவர் தகுதியானவர்தான்.
பொதுவாக கட்சியில் நிர்வாகிகளெல்லாம் தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி கட்டுப்பாட்டை விதி முறைகளுக்கு உட்பட்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரு பதவிக்கு இரண்டுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவது இயல்பான முறை. அதில் ஒருவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு பேசி தலைவர் சமாதானம் செய்துவிடுவார். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை நேரடியாக சந்தித்துப்பேசும் தலைவர் வைகோ. உடல் நிலை சரியில்லாத போதுகூட அவர் சோர்வடைந்தது இல்லை. அவரால் கட்சியில் அனைவரும் உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை திருப்பூர் துரைச்சாமி வழக்கமாகக் கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
- உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.
சென்னை:
ம.தி.மு.க.வுக்குள் நிலவி வரும் உட்கட்சி மோதலால் தொண்டர்கள் ஏமாந்தது போதும். இனி ம.தி.மு.க.வை தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைத்து விடுவது நல்லது என்று அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதில் அளித்தார். அதில் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் துரை வைகோ சின்ன பையன் அவருக்கெல்லாம் நான் பதில் அளிக்க முடியாது. வைகோ சொல்லட்டும் நான் பதில் அளிக்கிறேன் என்றார் துரைசாமி.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க. முடிவு செய்தது. அப்போது அதை எதிர்த்தவர் திருப்பூர் துரைசாமி. இப்போது அவரே ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் சொல்கிறார். ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான் அவர் இவ்வாறு பேசுகிறார்.
ம.தி.மு.க. தொடங்கிய 30 ஆண்டுகளில் அதன் தனித்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் அப்படியே செயல்படும்.
துரைசாமி தொழிற்சங்க நிர்வாகி. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி அமைப்பை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்துகிறார். கட்சியை தனது பாதுகாப்பு கேடயமாக வைத்துக்கொண்டார்.
கட்சியை தி.மு.க.வுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
2021 சட்டமன்ற தேர்தலில் கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சி தொண்டர்கள் புகார் கூறினார்கள். ஆனால் வைகோ தான் துரைசாமியின் அனுபவம், வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதுவும் செய்யவில்லை.
இப்போது உட்கட்சி தேர்தலிலும் துரைசாமி தனது பதவியை இழந்து வருகிறார்.
இதற்கிடையே அவரது சொந்த ஊரான திருப்பூரிலேயே அவரது கட்சி விரோத செயல்களை கட்சி தொண்டர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்றார்.