என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரடி"

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள் சாய்த்து போட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் என்பதால் அங்கு காட்டு யானைகள், கரடி, காட்டு மாடுகள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

    அவற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் கரடி, யானை, புலி, மான் உள்ளிட்டவை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவார பகுதிகளில் சுற்றிதிரிந்து வருகின்றன. மேலும் ஒருசில விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து அங்குள்ள வீடுகளை உடைத்து சமையலறையில் உள்ள பொருட்களை தின்றும், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கரடிகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து கடைகளை உடைத்து உணவுப்பொருட்களை சூறையாடி செல்வது தொடர் கதையாக உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு கரடி நேற்று நள்ளிரவு ஊட்டி நகருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள ஸ்டேட் வங்கி பகுதியில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த ஊட்டி போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து டேபிள்-சேரை சாய்த்து போட்டது. ஊட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் ரோந்து பணிக்கு சென்றிருந்ததால் அங்கு அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதற்கிடையே ரோந்துப்பணி முடிந்து போலீசார் மீண்டும் காவல் நிலையம் திரும்பினர். அப்போது போலீஸ் நிலையத்துக்குள் ஒரு கரடி சுற்றி திரிவது தெரியவந்தது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

    அப்போது எதேச்சையாக போலீசாரை கண்டதும் போலீஸ் நிலையத்தில் இருந்த கரடி திடீரென தப்பியோடியது. பின்னர் வந்தவழியாக திரும்பி வனப்பகுதிக்குள் சென்று விட்டது. போலீஸ் நிலையத்துக்குள் கரடி புகுந்து உலாவரும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூகவலை தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஊட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்தும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், அல்லது அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் வஜ்ரபு கொத்தூர் அருகே உள்ள அனக்காப்பள்ளியில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.

    தற்போது முந்திரி பழ சீசன் என்பதால் முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்கள் பழங்களை பறிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அனக்காப்பள்ளியை சேர்ந்த லோகநாதம் (வயது 47). கூர்மா ராவ் (49), லோகநாதம் மனைவி சாவித்திரி ஆகியோர் நேற்று காலை முந்திரி தோட்டத்தில் பழங்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது முந்திரி தோட்டத்தில் வந்த கரடி திடீரென பாய்ந்து சாவித்திரையை தாக்கியது. கரடி தாக்குவதை கண்ட லோகநாதம் மனைவியை காப்பாற்ற முயன்றார்.

    அப்போது கரடி லோகநாதத்தையும் தாக்கியது. இதில் இருவரும் வலியால் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகே இருந்த கூர்மா ராவ் ஓடி வந்து தம்பதியை காப்பாற்ற முயன்றார். அவரையும் கரடி சரமாரியாக தாக்கியது. 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கரடியை துரத்தினர். அப்போது கரடி முந்திரி தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தவர்களை பரிசோதித்த போது லோகநாதம் மற்றும் கூர்மா ராவ் இறந்தது தெரிந்தது.

    இதையடுத்து படுகாயம் அடைந்த சாவித்திரியை மீட்டு பலாசா அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கரடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்ததால் தொழிலாளர்கள் முந்திரி தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

    • உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
    • தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் காளி என்று பெயரிடப்பட்ட துருவ கரடி ஒன்று சமதளபரப்பில் பனிக்கட்டி மீது படுத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

    உயிரியல் பூங்காவில் விலங்குகளின் நிலைமை குறித்து கவலை தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து பூங்கா நிர்வாகம் பதில் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் துருவ கரடி பனியால் ஆன படுக்கையில் வசதியாக ஓய்வு எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.


    • ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.
    • உடனடியாக கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென கரடி ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த கரடி செய்வதறியாமல் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள தெருக்களில் ஓடியது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 57) பெண்ணை அந்த கரடி தாக்கி உள்ளது.

    இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண் அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கல்லிடைக்குறிச்சி பகுதியில் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊருக்குள் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதற்கிடையே கரடி ஊருக்குள் புகுந்து பொது மக்களை விரட்டிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வீடியோவில் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது.
    • கார் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    வன விலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவது உலகம் முழுவதும் உள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உணவு தேடி நெடுஞ்சாலைக்கு வந்த கரடி ஒன்று சிற்றுண்டிக்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஒரு போலீஸ் வாகனத்தின் கார் கதவை உடைக்க முயன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அந்த வீடியோவில், கரடி சிற்றுண்டியை தேடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை நெருங்குகிறது. பின்னர் அந்த கரடி வாயால் கார் கதவை திறக்க முயல்கிறது. மேலும் கால் பாதங்களால் காரின் கதவை திறக்க முயற்சிப்பதை காண முடிகிறது. ஆனால் அதன் முயற்சி பலனளிக்கவில்லை. கார் கதவு பூட்டப்பட்டிந்ததால் கரடியால் திறக்க முடியவில்லை.

    இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலான நிலையில், பயனர்கள் பலரும் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வருவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.


    • வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்துள்ளது.
    • வீடியோவை பார்த்த வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன்கஸ்வான் சமூக வலைதளங்களில் வன விலங்குகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

    அந்த வகையில், கரடியும், குட்டியும் மரத்தில் ஏறி, இறங்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். பொதுவாக கரடிகளால் மரத்தில் ஏற முடியாது என ஒரு கதையை கூறுவார்கள். ஆனால் அது தவறு என கூறும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.


    வீடியோவுடன் அவரது பதிவில், ஒரு நண்பர் கரடியிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிய கதையை நீங்கள் அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். இங்கே ஒரு இமாலயன் கரடியும், அதன் குட்டியும் அந்த கதையை பொய் என காட்டுகிறது என கூறி உள்ளார்.

    இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த நிலையில், வன ஆர்வலர்கள் மற்றும் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்த சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.
    • எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

    சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் சௌ சௌ இன நாய்க்கு கருப்பு வேலை பெயிண்ட் அடித்து பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இந்த சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளனர்.

    ஆனால் இதற்காக நாங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    "எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை' என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

    இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது.
    • இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் ஆயுதப்படை பட்டாலியன் மையம் உள்ளது.

    இதையொட்டிய பகுதிக்குள் நேற்று மதியம் ஒரு கரடி சுற்றித்திரிந்தது. அதனை கண்ட சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அச்சம் அடைந்து ஓடினர்.

    தொடர்ந்து கரடி தமிழ்நாடு 9-ம் அணி பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தில் ஏறியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அம்பை கோட்ட துணை இயக்குனர் இளைய ராஜா உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    அதனை விரட்ட வனத்துறையினர் சில நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது. இதனால் வனத்துறையினர் மரத்தின் அடியில் வலையை கட்டிவைத்தனர்.

    இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை. அதனை அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா பார்வையிட்டார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வனத்துறையினர் சற்று கண் அயர்ந்திருந்த நேரத்தில் கரடி தானாகவே மரத்தில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதையடுத்து வனத்துறையினர் வலையை சுருக்கி எடுத்துச்சென்றனர்.

    • தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
    • விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

    மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.
    • கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த பென்காம் எஸ்ட்டேட் அடர்ந்த வனப்பகுதி அருகே அமைந்து உள்ளது.

    இதனால் அவ்வப்போது இந்த பகுதியில் வனவிலங்குகள் உலா வருகின்றன. மேலும் அவை அங்கு வசிக்கும் பலரையும் தாக்கி விட்டு தப்பி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கடந்த 6 மாதங்களாக பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் 3-க்கும் மேற்பட்ட கரடிகள் தினமும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    அந்த நேரத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விடுவதால், கரடிகள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து சமையலறையில் உள்ள குக்கரை திறந்து சாதத்தையும் சாப்பிடுகின்றன.

    மேலும் கடைகளை உடைத்து அங்குள்ள எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை தின்றுவிட்டு சென்று விடுகின்றன. அதிலும் குறிப்பாக ஒருசில கரடிகள் இரவு நேரங்களிலும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன.


    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் தூக்கத்தை தொலைத்து இரவும் பகலுமாக தவியாய் தவித்து வருகின்றனர்.

    இரவும் பகலும் கரடிகள் நடமாட்டம் உள்ளதால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலை உள்ளது.

    பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவ்வப்போது தீப்பந்தங்கள் காட்டி விரட்டினாலும், கரடிகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் புதருக்குள் பதுங்கி கொண்டு போக்கு காட்டி வருகின்றன.

    எனவே பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்று அங்கு கூண்டு வைக்கப்பட்டு கரடியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ×