என் மலர்
நீங்கள் தேடியது "வேண்டுகோள்"
- குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.
- கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்:
தாராபுரம் கோட்டம், குண்டடம் மற்றும் ருத்ராவதி பகுதி மக்கள் கடந்த ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.காா்த்திகேயன் (பொறுப்பு) விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
தாராபுரம் கோட்டம், வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட குண்டடம் மற்றும் ருத்ராவதி ஆகிய பகுதிகளில் நிா்வாக காரணங்களுக்காக மின் அளவீடு மேற்கொள்ள முடியவில்லை.எனவே, இப்பகுதி மின் நுகா்வோா் கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கீட்டுப் பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை அக்டோபா் மாதத்துக்கும் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
- ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
- ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்ள் அதிகரித்துள்ளன. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, 1,200 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், ஆன்லைன் கடன் வழங்குவதாக கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக, 160 புகார்கள், குறைந்த முதலீட்டுக்கு அதிக பணம் எனக்கூறி 140, போலி வாடிக்கையாளர் சேவை மையம் எனக்கூறி, 116, 'பான் கார்டு அப்டேட்', செயல்முறை கட்டணம், ஜி.எஸ்.டி., இவற்றிக்கு முன் பணம் கட்டினால் பெரிய கடன் தொகை எனக்கூறி, 92 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
இது போன்ற மோசடிகளில் ஏமாறாமல் இருக்க செல்போனில் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மைதன்மையை அறிய வேண்டும்.
ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள அவர்களது இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
'கூகுள் கஸ்டமர் கேர்' என தேடி அந்த எண்களை தொடர்பு கொண்டால் மோசடி நிகழ வாய்ப்புள்ளது. 'பான்கார்டு' விவரங்களை பதிய செல்போனுக்கு எந்த வங்கியும்
குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. கடன் தருவதாக கூறும் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிந்த பின்னரே கடனுக்குமுயற்சிக்க வேண்டும். ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்ற 'டோல்பிரி' எண் அல்லது இணையதள முகவரியில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் நேரில் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343-294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொசு மருந்து அடிக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- நோய்கள் பரவும் நிலை உள்ளது
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதனை தடுக்க நீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியாகாத வகையிலும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அரியலூர் நகரில் வாகனம் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனம் விரைவாக செல்வதால் முறையாக கொசு மருந்து அடிக்கப்படவில்லை என்றும், தெருக்களில் சந்துகளில் உள்ள வீடுகளில் கொசு மருந்து அடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
- குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பாப்பிரெட்டிப்பட்டி,
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் தலைமையில் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்கள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் சிறப்பாக கடந்த 3 தினங்களாக கொண்டாடப்பட்டு பொது மக்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தி.மு.க. தலைவர்,தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினின் ஆசியோடும்,தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும்,தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நல் வாழ்த்துக்களுடனும், தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆலோசனைபடி கழக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கிளை கழகங்கள் தோறும் கட்சியின் கொடியினை ஏற்றியும் ஏழை, எளிய மக்கள்,மாணவ,மாணவியர்கள்,முதியவர்கள்,மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலதிட்ட உதவிகள் வழங்கி குடும்ப விழாவாக சிறப்பாக கொண்டாடுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பி.எஸ்.சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் மாவட்டம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையமானது தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் முகமையினை பதிவாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவை ஆதார் சேர்க்கை முகமையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்களின் முகவரி நிரந்தரமாக இருந்தால் ஆதார் தரவை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை சேவை மையங்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்பட்டு வருகிறது.
தற்போது பொதுமக்கள் ஆதார் பதிவை புதுப்பித்து பயன்பெற வசதியாக சுழற்சி முறையில் ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மார்ச் மாதம் 5-ந் தேதியும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 12-ந் தேதியும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் வருகிற ஜனவரி மாதம் 8-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 19-ந் தேதியும் ஆதார் சேவை மையம் செயல்படும்.
ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 22-ந் தேதி மற்றும் மார்ச் மாதம் 26-ந் தேதி, பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் ஜனவரி மாதம் 29-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதியும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 9-ந் தேதியும், காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 16-ந் தேதியும், உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 23-ந் தேதியும், மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் மாதம் 30-ந் தேதியும் ஆதார் சேவை மையங்கள் செயல்படும்.
இதுபோல் எல்காட் மூலமாக நடக்கும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தொட்டிப்பாளையம், நல்லூர் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பல்லடம், உடுமலை, காங்கயம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம், தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் உள்ள ஆதார் மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை செயல்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும். ஆதார் புதிய பதிவு, 5 வயது மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை பதிவு, பெயர், முகவரி, பிறந்ததேதி மாற்றம் செய்தல், புகைப்படம், கைவிரல், கருவிழி மாற்றம் செய்தல், ஆவணங்களை புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம்.
தமிழக அரசின் சலுகைகளை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் ஆதார் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளாக ஆதார் புதுப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்யலாம்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று கரும்பு வழங்கப்படுகிறது.
- மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவனியாபுரம்
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பொங்கல் தொகுப்புடன் கரும்பையும் சேர்த்து வழங்கியதற்கு காரணம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு பயந்து அல்ல.
2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர் களுக்கு முழுமையாக ரூ.1000த்துடன் பொங்கல் தொகுப்பு மற்றும் கரும்பு இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் முறையாக கிடைக்கும். அதில் எந்த தங்கு தடை இருக்காது. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மதுரை மாநகர் விவசாய அணி துணை அமைப்பாளர் மாணகிரி குணசேகர்,ஜெய ஹிந்துபுரம் நாகராஜன் உள்பட பலர் இருந்தனர்
- தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
பெரம்பலூர்:
100 நாள் வேலையை பாதுகாத்திடவும், அனைவருக்கும் வேலையை உத்திரவாதப்படுத்தவும் தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலையை விரிவுப்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன முட்லு நீர்த்தேக்கம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முறைகேடுகளை களைந்து தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். விதவை, முதியோர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவித்தொகை ரூ.1,000 பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர், கமிஷனர் வலியுறுத்தியுள்ளனர்.
- பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற பொருட்களை போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது
சுரண்டை:
சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகையை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கொண்டாட பொது மக்களுக்கு நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், கமிஷனர் முகமது சம்சுதீன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக கமிஷனர் முகமது சம்சுதீன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
சுரண்டை நகராட்சி பகுதியில் பொங்கல் பண்டிகை யையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சுத்தம் செய்யப்பட்டு அகற்றப்படும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பை களை சாலைகளிலும், வாறுகால்க ளிலும் கொட்டாமல் நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதன்படி வார்டு எண் 6 இந்து நாடார் மண்டபம் அருகில், வார்டு எண் 10 வாடியூர் ரோடு, வார்டு எண் 14 சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில், வார்டு 18 வரகுணராமபுரம், வார்டு எண்21 நகராட்சி அலுவலகம் பின்புறம் ஆகிய இடங்களில் குப்பைகளை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை சாலைகளில் கொட்டாமல் மேற்கண்ட இடங்களில் வழங்க கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் டயர், துணி, பிளாஸ்டிக்குகள் போன்ற எந்த பொருட்களையும் போகி பண்டிகையின்போது எரிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டு இது தொடர்பாக சுகாதார ஆய்வாளர் கருப்பசாமியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராமர், ஜெயபிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள், பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
- கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைத் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது.
புறத்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது.
அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற வகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.
- கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.
ராமநாதபுரம்
இந்தியாவில் வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் வேலூர், விழுப்பரம், திருவண்ணா மலை, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் கால்நடை களுக்கு தோல் கழலை நோய் பரவி வருகிறது.
இந்நோய் பரவாமல் தடுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தொடர்பான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நோய் கூலக்ஸ் என்ற கொசு கடிப்பதன் மூலமும் கடிக்கும் பூச்சிகள் மற்றும் உண்ணிகள் மூலம் கால்நடைகளுக்கு பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே விவசாயிகள் தங்க ளது கால்நடைகள் கட்டப் பட்டிருக்கும் கொட்டகை மற்றும் தரைத்தளத்தில் கொசுவை ஒழிக்க கொசு மருந்தை அடிக்க வேண்டும்.
கண்ணில் நீர் வடிதல், சளி ஒழுகுதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் வீக்கம் மற்றும் உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேற்றம், கால்களில் வீக்கம், மாடுகள் சோர்வாக காணப்படுவது போன்றவை தோல் கழலை நோயின் அறிகுறிகள் ஆகும்.
நோய் தாக்கம் ஏற்பட்டு உள்ள கால்நடைகளுக்கு உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்தவர்களை அணுகி உரிய ஆலோசனை பெற்று நோய்க் கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தங்கள் கிராமத்தில் நடக்கும் தோல் கழலை நோய் தொடர்பான முகாம்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்
- இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வேளாண், வேளாண் பொறியியல், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள், திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்க உரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் 100 மாடுகள் இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்பதால், சுற்று வட்டார பகுதியில் உள்ள மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையத்தில் ராகி விற்பனை செய்வதற்கு வருவாய்த் துறையினர் சான்றிதழ் வழங்க கால தாமதம் செய்வதாகவும், நாள் கணக்கில் அலைக் கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய கலெக்டர் தருமபுரி மாவட்டத்தில் ராகி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொள்முதல் நிலையத்தில் தருமபுரி நகர் பகுதிக்கு வினியோகம் செய்கின்ற அளவிற்கு கூட ராகியை விவசாயிகள் கொடுப்பதில்லை. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள ராகி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவித்த ராகியை விற்பனைக்காக கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு ராகி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு உரிய சான்றிதழை வருவாய்த் துறையினர் உடனடியாக வழங்க வேண்டும்.
இதில் சிட்டா, அடங்கல் வழங்கும்பொழுது ராகி பயிர் ஒரு வருடத்திற்குள்ளாக சாகுபாடி செய்யப்பட்டிருந்தால் கூட, அந்த ராகி பயிர்களுக்கு சிட்டா, அடங்கல்களை வருவாய்த் துறையினர் தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் ராகி வைத்துள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்துறை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இந்த ராகி கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி விவசாயிகள் போதிய வருவாய் ஈட்டி கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.