என் மலர்
நீங்கள் தேடியது "Kumbabhishekam"
- கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது.
- 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.
7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அலங்காநல்லூர் அருகே நயினார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அருகே உள்ள கீழசின்னனம்பட்டி கிராமத்தில் நயினார் சுவாமி, நொண்டிசுவாமி, ஆண்டிசுவாமி, பட்டவர் சுவாமி, அக்காயிசுவாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புண்ணியாசனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. 4 கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி பீடத்தின் மீது அமைந்துள்ள நயினார் சுவாமி மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேம் செய்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நயினப்பன் அம்பலம் வகையறா மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
- நான்கு கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
சுவாமிமலை:
ஆடுதுறை மருத்துவ க்குடியில் விசாலாட்சி அம்பாள் காசி விஸ்வநாதர் கோயில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய முறையில் திருப்பணி செய்து வரும் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை ( 11-ம் தேதி) மாலை 4 மணிக்கு கங்கை, யமுனா, கோதாவரி,சிந்து, நர்மதை, தலைக்காவிரி, சரஸ்வதி ஆகிய சப்த நதிகள் உள்ளிட்ட 42 புனித தீர்த்தங்களை அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ராமானந்தா தலைமையில் துறவியர்கள் கோயிலுக்கு நேரடியாக எடுத்து வருகின்றனர்.
13-ம் தேதி மாலை 4 மணிக்கு நதிகளின் புனித நீர் கலச பூஜையும், 18-ம் தேதி காலை 9 மணிக்கு வீரசோழன் ஆற்றங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்புடன், அலங்கார குதிரை, ஒட்டகம், செண்டை மேளம், மங்கள இசை முழங்க புனித நீர் எடுத்து வரும் ஊர்வலமும், தொடர்ந்துநான்கு கால யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேகம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடக்கிறது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாச ந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரம்மாசாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கசுவாமி தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பேரூராதீனம் சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண மடம் துறவியர்கள், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்துறவியர்கள் உள்ளிட்ட சைவ, வைணவ மடாதிபதிகள் உள்ளிட்ட துறவியர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கிராம நாட்டான்மைகள், செயல் அலுவலர்கிருஷ்ண குமார், பக்தர்கள் செய்து ள்ளனர்.
- பொற்பனை முனீசுவரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது
- ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்பகோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த பொற்பனை முனீசுவரர் கோவிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சில தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்
- மகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டிக்கு சொந்தமான சுமார் 500 ஆண்டுகள் பழமையான மகாலிங்க சுவாமி மற்றும் ஜீவசமாதி மடத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
3 நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புண்ணியாசனம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜையுடன் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி வானத்தில் கருடன்கள் வட்டமிட ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை கலசங்கள் மீது ஊற்றப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும், அன்ன தானமும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தொழிலதிபர்கள் கே.ஜி.பாண்டியன், ஏ.வி.பார்த்தி பன் மற்றும் பாலமேடு கிராம அனைத்து உறவின்முறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டினை கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொரு ளாளர் ஜோதிதங்கமணி, மற்றும் கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு போலீசார் செய்திருந்தனர்
- தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
- 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. அவினாசியப்பருக்கு ஏழுநிலை கோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இக்கோவிலுக்குசாமிதரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகா கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
இவ்வாறு பல சிறப்பு பெற்ற இக்கோவிலில். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த வேலையும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேரத்திகடன் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் மற்றும் கருணை பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் அழகிய மண்குதிரைகளை சுமந்துவந்து இக்கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி, கிடாய் வெட்டி விஷேசம் செய்வது ஆண்டாண்டுகாலமாய் நடந்துவருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும்சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பிஅனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
- மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
- பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பஞ்ச (ஜந்து) நரசிம்மர்கோயில்கள் அமைந்துள்ளனஇந்த கோயில்களில் இரண்டா வது ஸ்தலமாக விளங்கு வது மங்கைமடம் வீரநரசிம்மர்கோயில் ஆகும்.முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரை மணம்புரிய 1008 வைஷ்ணவ அடியார்களுக்கு ஒரு வருடகாலத்திற்கு அன்ன தானம் வழங்கியதாகவும், மேலும் திருமங்கைஆழ்வார் வீரநரசிம்மரை வணங்கியும், ஆராதித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் மேல தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வந்து மூல விமான கழகத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், கோயில் பூஜகர் பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாங்கூர் நாராயண அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
- தமிழக கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
- காசித் தமிழ்ச் சங்கம நிகழ்விற்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
திமுக பொறுப்பேற்ற பிறகு, ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான். மேலும் 300க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, அரசு அதிகாரிகளை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புதுப்பிக்க இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமோ அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.
திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.
பாஜக ஒரு சைத்தான்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
- விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
- முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம்.
அவினாசி :
மதங்களை கடந்த மனித நேயத்தால் மட்டுமே, அமைதியான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, பல இடங்களில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் உட்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம். இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், இரு சமுதாயத்தினரும், பல தலைமுறைகளாக உறவினர் போன்று வாழ்ந்து வருகின்றனர். தலைமுறை பல கடந்தும், இருதரப்பினரும் பரஸ்பரம், தங்களை மாமா, மாப்பிள்ளை என உறவுமுறை சொல்லியே அழைக்கின்றனர்.
அப்பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
- விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
- ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இதன்படி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கருப்பராய சுவாமி கோவிலில் பூஜை நடைபெற்று, ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.
இதில் காளி, அம்மன் வேடமணிந்து வந்து நடனமாடியது பக்தர்களை கவர்வதாக அமைந்திருந்தது. முளைப்பாரி ஊர்வலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (செவ்வாய்கிழமை) 108 மூலிகை ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூஜாரி டி.எம்.குமாரவேல் மற்றும் குடும்பத்தினர் உள்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர்.
- இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் விநாயகபுரம், ராயபுரம் (விரிவு) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகப்பெருமான் கோவிலில் நாளை (2-ந்தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
இதையொட்டி நேற்று விநாயகர் வழிபாடு, திருவருள் அனுமதி பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, கணபதி வேள்வி, நிலத்தவர் வேள்வி, திருமகள் வழிபாடு, நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.மாலை கணபதி வழிபாடு, திருமண் எடுத்து முளைப்பாலிகை இட்டு வழிபாடு, காப்பணத்தல், திருவருட் சக்தியை திருக்குடத்தில் ஏற்றல், வேள்விச்சாலையில் அமர்த்தல், முதற்கால வேள்வி, கணபதிக்கு முதற்கால நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.
இன்று 1-ந்தேதி காலை 9மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆச்சார்யர் ஆன்மார்ந்த வழிபாடு, இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மூவா வினைகளை களைந்து முத்திக்கு வித்தாகி முக்கண் முதல்வர் மகனுக்கு 3-ம் காலவேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நான்மறைபோற்றும் நாயகன், முப்பழம் நுகரும் மூஷிகவாகனம், வரமருளும் வரசித்தி விநாயகபெருமானுக்கு 4-ம் கால வேள்வி நடக்கிறது. காலை 6 மணிக்கு திருவருட்சக்திகளை வேள்விச்சாலையிலிருந்து மூலத்திருமேனிக்கு அளித்தல், திரவிய ஆகுதி, முழுநிைற வேள்வி நடக்கிறது. 6-30மணிக்கு கோபுர கும்பாபிஷேகம் நன்னீராட்டு , 6-40மணிக்கு பரிவார தீர்த்தங்கள் நன்னீராட்டு நடக்கிறது.
7 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர். காலை 7.30 மணிக்கு பதின் மங்களகாட்சி பெருஞ் திருமஞ்சனம், அலங்காரபூஜை, பேரொளி வழிபாடு, திருக்காப்பு காத்தல், அருள்பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. பின்னர் மங்கள இசையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- கல்லக்குடி கருப்பண்ண சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது
- திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்சி
திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி பாலாலயம் செய்து புதிதாக புனரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலகணபதி பூஜை, மூன்று, நான்காம் காலை யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு செய்து காலை 10 மணி அளவில் ஆலயத்தின் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதையடுத்து ஆலயத்தில் உள்ள கள்ள மேட்டு கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பொன்னியம்மன், பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சர்வ சாதகம் நந்தகுமார் முரளி வேதம் நாதா சிவாச்சியார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீப ஆராதையுடன் காண்பிக்கப்பட்டது.
விழாவில் டால்மியா சிமெண்ட் ஆலை துணை பொது மேலாளர் சுப்பையா, துணை செயல் இயக்குனர் மகேஷ், மேலாளர் ராதாகிருஷ்ணன், ரமேஷ்பாபு, பாலசுப்பிரமணியன் முன்னாள் தொழிற்சங்க தலைவர் இளங்கோன் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா சிமெண்ட் நிர்வாகம், சுரங்க தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.