என் மலர்
நீங்கள் தேடியது "tag 94716"
- டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை.
- ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
நெல் விவசாயிகள் நலன் கருதி கடந்த ஆண்டு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு, 72 ரூபாய் உயர்த்தியது. இந்தாண்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் நடப்பாண்டு கொள்முதல் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மாநில அரசின் ஊக்கத்தொகை 75 ரூபாயுடன் சேர்த்து சன்ன ரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் மோட்டாரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் கிடைக்கிறது.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது :-
மத்திய அரசு 2014 தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன்50 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை. குவின்டாலுக்கு100 ரூபாய் உயர்வால் பலன் இல்லை. இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பி.ஏ.பி., பாசன சபை தலைவர் கோபால் கூறுகையில், கொள்முதல் விலை உயர்வு போதாது. நடவு, உழவு, பூச்சி மருந்து, களை எடுப்பு, விதை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இது பயன் தரக்கூடியதாக இல்லை. ஒரு குவின்டாலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படியாகும்.
உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியசெயலாளர் நடராஜ் கூறுகையில்,
இந்த விலை போதாது. ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்கிறது. அதை காப்பாற்ற வேண்டுமானால் 1,000 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும். ஒரு குவின்டால் நெல் 3,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரை யோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை தவிர தினந்தோறும் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.250-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கும் விற்பனையானது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும்,கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.500-க்கும் , மொந்தன் காய் ஒன்று ரூ.350- க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து குறைந்ததாலும்,கோவில் விழாக்கள் மற்றும் கல்யாண நிகழ்ச்சிகள் அதிக அளவில் இருந்ததால் வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது.
- ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
உடுமலை:
உடுமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக, தக்காளி, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒருமுறை பந்தல் அமைத்தால் தொடர்ந்து, ஐந்து முதல், ஏழு ஆண்டுகள் வரைக்கும் பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பாகற்காய், சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் மற்றும் கோவைக்காய் இம்முறையில் சாகுபடி செய்யலாம். பாகற்காய் சாகுபடியில் பத்து அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 4 ஆயிரம் செடிகள் வரையும் நடவு செய்யலாம்.சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து, 75 முதல் 90 நாட்கள் வரைக்கும், காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரைக்கும் மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- கூட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி,மீட்டர்வட்டி,தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால் சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் துணை கண்காணிப்பாளர் தலைமையில் கந்துவட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில் கந்து வட்டி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்டம் வேதாரணியம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா, வேதாரணியம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர்கொடி, தலைஞாயிறு காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வேதார ணியம் தலைஞாயிறு, வாய்மேடு, கரியாபட்டினம் சுற்றுவட்டார பொது மக்களும் கலந்து கொ ணண்டனர். கூட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் கந்துவட்டி மீட்டர்வட்டி தினவட்டி என பல்வேறு வகையான கூடுதல்வட்டிகளால். சில்லரை வணிகர்கள் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர் மேலும் கந்து வட்டி சம்பந்தமான பல பிரச்சினைகளை குறித்து பொதுமக்கள் ேபசினர்.கூட்ட முடிவில் துணை கண்காணிப்பாளர் முருகவேல் பேசுகையில்:-
கந்து வட்டி சம்பந்தமான எந்த புகார் வந்தாலும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அச்சப்படமால் புகார் அளிக்கலாம் புகார் அளித்தவுடன் உடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் காலியாக உள்ள தரிசு நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
- மக்கள் மோட்டார் சைக்கிள் கூட ஓட்ட முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் காலியாக உள்ள தரிசு நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதேபோல், பாப்பாகவுண்டனூர் பகுதிக்கு செல்லும் மண் சாலை மழையால் மிகவும் சேதமடைந்து உள்ளது. நடந்துகூட செல்லமுடியாத அளவிற்கு புதை குழியாக மாறியுள்ளது. நடந்து சென்றால் கால்கள் மண்ணில் புதையும் அளவிற்கு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் கூட ஓட்ட முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாய குடும்பத்தினர் எனபதால், கறவை மாடுகளும், கால்நடைகளும் வளர்த்து வருகின்றனர். பால் வியாபாரமும் செய்து வருகின்றனர். தற்போது இப்பகுதிக்கு வரும் சாலை சேதமடைந்து உள்ளதால் பால் வாகனம் வர முடியவில்முலை. கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. எனவே ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, மண்ணை கொட்டி சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும். மேலும், பேவர் பிளாக் சாலையோ அல்லது கான்கிரீட் சாலையோ அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் மழையால் நீரில் மூழ்கி வாழை, நெற்பயிர்கள் சேதமானது.
- விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் காயாம்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகள் நெல், தென்னை, வாழை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த வருடங்களில் பருவமழை காலத்தில் தொடர்மழை பெய்வதால் மதுரை மாவட்டத்தின் எல்லையில் உள்ள செம்மிணிபட்டி கிராமத்திற்கு உட்பட்ட கருப்பாச்சி கண்மாய் துார் வாரததால் சுமார் 25 ஏக்கருக்கு மேல் பட்டா இடத்தில் நீர்பிடிப்புக்கு உள்ளாகிறது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மற்றும் நெல் நடவு செய்தனர். தற்போது சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக கண்மாய் நிரம்பி வாழை பயிரிட்ட நிலத்தில் 2 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது. இதனால் சுமார் 25 ஏக்கர் வாழை, நெற் பயிர்கள் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் வருடம் தோறும் பெருத்த நஷ்டத்தை இந்த பகுதி விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி ராமநாதன் கூறுகையில், அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், மதுரை- சிவகங்கை என இரு மாவட்ட அதிகாரிகளும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற முடியாமல் தட்டிக்கழிப்பதாக குற்றம் சாட்டினார்.
- சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.
- பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கம் சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், சீர்காழி ஒன்றிய தலைவர் சி. கலியமூர்த்தி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் கே கலியமூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் சிவராமன், ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் ராமன் ஆகியோர் கடந்த 2021- 2022 பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து வகைகளுக்கும் உரிய பயிர் காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நீதி சோழன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெய சக்திவேல், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வித்யா தேவி, கட்சி நிர்வாகிகள் பாஸ்கரன், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
- ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
- கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது
குடிமங்கலம் :
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டு முழுவதும், தக்காளி, கத்தரி உள்ளிட்ட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்ளாமல், சந்தை வாய்ப்புகள் அடிப்படையில், மாற்று சாகுபடியையும் சில விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளாக, பொரியல் தட்டை சாகுபடிக்கு உடுமலை பகுதி விவசாயிகளிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.கேரளாவில், அவியல், பொரியல், கூட்டு என பொரியல் தட்டை உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.எனவே இப்பகுதிகளில் விளையும் பொரியல் தட்டை, கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு, விற்பனைக்கு செல்கிறது.முக்கிய சீசனின் போது கேரள மாநில வியாபாரிகள் விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து, கொள்முதல் செய்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர் சீதோஷ்ண நிலை உள்ள உடுமலை சுற்றுப்பகுதிகளில் நல்ல மகசூல் கிடைக்கிறது.விதைப்பு செய்த, 50வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். நாள்தோறும் ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. 10 டன் வரை மகசூல் கிடைக்கிறது.கேரளா மட்டுமல்லாது உள்ளூரிலும், சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால் அனைத்து சீசன்களிலும் பொரியல்தட்டைக்கு நிலையான விலை கிடைக்கும்.இதே போல், தோட்டக்கலைத்துறை வாயிலாக சாகுபடிக்கு தேவையான விதைகளை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
- அறுவடை நிலையில் பிற ரக கலவன்கள் நீக்கும் பணியினை விரைவுபடுத்த உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
உடுமலை :
உடுமலை அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில், குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்போது முதிர்ச்சி நிலையிலுள்ள நெல் விதைப்பண்ணைகளை, திருப்பூர் மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான விதைச்சான்று அலுவலர் குழு ஆய்வு செய்தது.இது குறித்து விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், கண்ணாடிபுத்துார், கொமரலிங்கம், கணியூர், கடத்துார், சோழமாதேவி, காரத்தொழுவு பகுதிகளில், குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.குறுகிய கால நெல் ரகங்களான கோ - 51, ஏ.எஸ்.டி., - 16, ஏ.டி.டி., - 37, ஏ.டி.டி., - 36, ஐ.ஆர்., - 50, ஏ.டி.டி., - 45, 43, 53 ஆகிய ரகங்களின் விதைப்பண்ணைகள் ஆய்வு செய்யப்பட்டது. அறுவடை நிலையில் பிற ரக கலவன்கள் நீக்கும் பணியினை விரைவுபடுத்த, உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.சன்ன ரக ஏ.டி.டி., - 53 ஆதார நிலை விதைப்பண்ணைகள் காரத்தொழுவு பகுதியில் அமைக்கப்பட்டது. இதனை விதைச்சான்று அலுவலர் குழு ஆய்வு செய்து வயல் தரம் உறுதி செய்யப்பட்டது.புதிய ரகமான, ஏ.டி.டி., - 53 நெல்லானது 105 முதல் 110 நாட்கள் வயதுடைய குறுகிய கால நெல் ரகம், அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றதாகும்.குறுவை மற்றும் கோடை பருவங்களில் பயிரிட ஏற்ற உயர் விளைச்சல் ரகமாக உள்ளதோடு பாசனத்திற்கு நீர் திறக்க தாமதமானாலும் அக்டோபர் மாதத்திற்கு பின்னரும் பயிரிடலாம்.20 ஆண்டுகளாக உள்ள ஏ.டி.டி., 43 ரகத்தை விட, கூடுதல் தரமும், மில் அரவைத்திறனும், உயர் விளைச்சல் திறனும் கொண்டதாகும். இந்த புதிய நெல் ரகம், ஏ.டி.டி., - 43 மற்றும் ஜெ.ஜி.எப்., - 384 கலப்பிலிருந்து, வம்சாவழித்தேர்வு வாயிலாக உருவாக்கப்பட்டது.105 முதல் 110 நாட்கள் வயதுடையதாகவும், ஹெக்டேருக்கு, 9,875 கிலோ மகசூல் தரக்கூடியதாகும்.மேலும் சிறப்பான செடி அமைப்பும், அடர்ந்த கதிர்களையும், நெருக்கமான நெல் மணிகளையும் கொண்டதாகும். ஆயிரம் நெல் மணிகளின் எடை, 14.5 கிராம் இருக்கும்.
சன்ன ரக வெள்ளை அரிசி, அதிக அரவைத்திறன் (62 சதவீதம்), முழு அரிசி காணும் திறன் (65 சதவீதம்) மற்றும் சிறந்த உமி நிறம் கொண்டதாகும்.தற்போது அறுவடை நிலையிலுள்ள ஏ.டி.டி., - 53 நெல் விதைப்பண்ணையில் அறுவடை முடிந்து, அரசு அனுமதி பெற்ற விதை சுத்தி நிலையங்களில் சுத்தப்பணி மேற்கொள்ளப்படும்.விதை மாதிரி எடுத்து அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில், முளைப்புத்திறன், பிற ரக கலவன்,புறத்தூய்மை, ஈரப்பதம் என அனைத்து இனங்களிலும் முடிவு அறிக்கை பெறப்படும். அதன்பின் சான்று அட்டை பொருத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.மடத்துக்குளம் வட்டாரத்தில் வரும் சம்பா பருவத்திற்கும், நிலம் தயார் செய்யும், நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருவதால் விதைத்தேர்வில் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்.தரமான சான்று பெற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இதனால் அதிக முளைப்புத்திறன், பிற ரக கலவன்கள் இல்லாமல் அதிக மகசூல் பெற முடியும்.
இவ்வாறு விதைச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- சத்திரக்குடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் நடந்தது.
- நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் பற்றி விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.
இதில் சத்திரக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் பேசுகையில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் நெல் திட்டத்தில் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் விநியோகம் மற்றும் நெல் நுண்ணூட்டச் சத்து இடுவதன் அவசியம் அனைத்து கிராம திட்டத்தில் தேர்வான அ. புத்தூர், போகலூர், எட்டிவயல், மற்றும் மென்னந்தி, நாகாச்சி விவசாயிகளுக்கு நெல் பயிரில் அடியுரமாக இடுவதற்கு 50 சதவீதம் மானியத்தில் சிங் சல்பேட் உரம் வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் நிரேஷ் குமார் பேசுகையில், குழித்தட்டு, மிளகாய் நாற்றங்கால், நுண்ணீர் பாசனம் அமைத்தல் போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.
கால்நடை உதவி மருத்துவர் தமிழ்ச்செல்வி பேசுகையில், மாட்டு தீவன பயிர்கள் மற்றும் கால்நடை தீவனங்களான சுபாபுல், அகத்தி, சாகுபடி பற்றி எடுத்துக் கூறினார். கால்நடைகளுக்கு அரிசி மாவு சாதம் உணவாக கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கூறினார்.
வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர் அருண்ராஜ், நெல் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி கூறினார்.
பாண்டிக்கண்மாய் முன்னோடி விவசாயி ஜீவானந்தம், கீழக்கோட்டை முன்னோடி விவசாயி இளங்கோவன், துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், அட்மா திட்ட மேலாளர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜாதிக்காய், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- ஏற்றுமதி சந்தையில் ஜாதிக்காய் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 306 விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
தென்னை மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டும் அப்பகுதியில் விளையும் பிரதான பயிர்கள் ஆகும். இதில் ஜாதிக்காய், சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ சிகிச்சைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை உடையது.
இந்நிறுவனத்தின் விவசாயிகள் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று அங்கு நடந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இதன்மூலம், ஜாதிக்காயை மொத்தமாக விற்பனை செய்வதற்கு தரம் பிரிப்பது மற்றும் விற்பனைக்கு அனுப்புதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த இருக்கும் 40 விவசாயிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக இடைத்தரகர்கள் இன்றி ஏற்றுமதி வர்த்தகரிடம் நேரடியாக பேசி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளனர். இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான இரஞ்சித் கூறியுள்ளதாவது:
ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத்தரகர்களுக்கு எங்களுடைய விளைப் பொருட்களை விற்று வந்தோம். அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை கூறி வாங்கி வந்தனர். ஆனால், இப்போது முதல் முறையாக எங்களுடைய உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் வர்த்தகரை நேரடியாக தொடர்பு கொண்டு அதிக லாபத்திற்கு விற்பனை செய்துள்ளோம். எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். இனி இதேபோல் நேரடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் செட்டிநாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.
பாரம்பாரிய மிக்க உள்ளுர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படு த்துதல் விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
அனைத்து விவசாயி களும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர்ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கேற்று இதில் இடம் பெற்றுள்ள வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களை அறிந்து, இது குறித்த கூடுதல் விவரங்களை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது உணவு உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.