என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96179"

    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

    இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் பணியாளர்கள் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அதிகாலை பண்ணாரி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் உலாவி கொண்டு இருந்தது. சோதனைச்சாவடியின் முன்பு சாலை நடுவே காட்டு யானை நீண்ட நேரம் நின்றது.

    இதனால் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டனர். சுமார் 30 நிமிடம் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் சோதனை சாவடி பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி க்குள் மீண்டும் சென்றது. இதனால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் அருளாச்சியை சேர்ந்த அரவிந்த்(வயது24),அவரது தம்பி ராஜதுரை(21), இவர்களது மாமா மகன் சசி(20), நண்பர் விஸ்வநாத பிரதீப் ஆகிய 4 பேரும் பக்கத்து கிராமமான டி.ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது காரை வாங்கி கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதியபேருந்துநிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் அண்ணாத்தே படத்தின் இரவு காட்சிக்கு சென்றனர். அங்கு படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒருமணி அளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதபிரதீப் ஓட்டினார்.

    தென்காசிரோட்டில் சோலைசேரி மண்ணோடி கண்மாய் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து 3 முறை உருண்டு தலைகுப்புற கவிழந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சசி சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல்நிலைய சகறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் பிரபு (வயது 29). கார் டிரைவர். இவர் சசிகலா (39) என்பவரை காரில் ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். நேற்று நள்ளிரவு ஊராளிப்பட்டி பிரிவில் கார் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரின் பெரும் பகுதி சேதமடைந்தது. அவ்வழியே வந்தவர்கள் படுகாயமடைந்த பிரபு மற்றும் சசிகலாவை மீட்டு திண்டுக்கல் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடந்து வருகிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களில் வெளியூருக்கு செல்லும் மக்களும் விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களும் அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    பல நேரங்களில் உயிரிழப்பும் நடந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இந்த சாலையில் பல விபத்துகள் இது போல நடந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அடிக்கடி முகாமிட்டு அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    அவினாசியில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கோவையில் உள்ள உருக்கு ஆலையில் எந்திரங்கள் இயக்குபவராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி தமிழ்செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6), மகள் நித்திகா(3) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்றார். அங்கு விழா முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிள் அவினாசி சாலையில் இன்று அதிகாலை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். 3 பேர் பலத்த காயங்களுடன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக குழந்தை நித்திகா உயிர் தப்பியது. மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் மனோஜ்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது41) உள்பட 15 பேர் ஒரு வேனில் சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். வேனை அதே பகுதியை கதிரேசன் என்பவர் ஓட்டி சென்றார்.

    துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 9 மணி அளவில் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வேன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தொழிற்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று வேன்டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரம் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த செல்வகுமார், விஜயா(52), லட்சுமி(42), ராணி(52) இலஞ்சியம்(50), கனக வள்ளி((50), கலைசெல்வி(40)வேன் டிரைவர் கதிரேசன் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    திண்டுக்கல் அருகே சுற்றுலா வந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வடமதுரை:

    சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரை அடுத்த கீரனூர் பிரிவில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை கடந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் எதிர்திசையில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்தில் கரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் மாதம்பள்ளியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது27), காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் (27), தேனியை சேர்ந்த முத்துகாமு (21), கிருஷ்ணகிரியை சேர்ந்த பாலாஜி (20) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மற்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    குண்டல்பட்டியில் இன்று உப்பு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
    தருமபுரி

    சேலத்தில் இருந்து உப்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அந்த லாரி இன்று காலை தருமபுரி அடுத்துள்ள குண்டல்பட்டி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.  

    இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் சாலையில் சிதறியது. இதில் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிக்கோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.

    தேவகோட்டை:

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ளது பாறசாலை. இந்த பகுதியில் வசிக்கும் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தமிழக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சுற்றுலாவாக புறப்பட்டனர். பாறசாலையை சேர்ந்த ஷியாம்குமார் (வயது 28) பஸ்சை ஓட்டினார்.

    ஊட்டி, பழனி பகுதி களுக்கு சென்றுவிட்டு நேற்று சுற்றுலா பஸ் வேளாங்கண்ணிக்கு வந்தது. அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள தாவூத்து மாதா கோவிலுக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அந்த பஸ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்புதூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புலிக்குட்டி கிராம பகுதியில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் அங்கிருந்த கால்வாய் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருவேகம் புதூர் போலீசார் விரைந்து சென்றனர். காயம் அடைந்த சந்திரன் (48), சுதாகரன் (60), இருதயம்மாள் (80), வினிஸ் (14), தங்கையன் (55), அருண்போஸ் (24), ஸ்டீபன் (45), சிராஜ் (31), அஜி (32), அப்புக்குட்டன் (78), ஜெயக்குமாரி (55), லீசாமோல் (29), சரசா (56) உள்பட 16 பேர் மீட்கப்பட்டு காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்படடது. இவர்களில் சந்திரன், சுதாகரன், இருதயம்மாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொ) மனோகர், திருவேகம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமணிசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் புளிய மரத்தில் மோதிய விபத்தில் பெண் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    நெல்லை மாவட்டம் சிவகிரியில் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். அவரது இறப்பை அறிந்து திருப்பூரில் இருக்கும் உறவினர்கள் துக்க வீட்டிற்கு செல்ல திருப்பூரிலிருந்து கார் மூலம் கிளம்பினர். காரை சரவணகுமார் (வயது 42) ஓட்டினார்.

    காரில் சரவணகுமாரின் சகோதரர் சந்திரசேகர் (38) அவரது மனைவி சீதாலட்சுமி (33), ரஞ்சித் (10), அமிர்தா (7),மற்றும் கோதை நாச்சியார் (45), பாண்டீஸ்வரி (28), சேது அம்மாள் (65) ஆகியோர் இருந்தனர்.

    இன்று காலை ஆம்னி கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரி அருகே வரும் போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் வந்த அனைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சேது அம்மாள் (65) என்பவர் மட்டும் உயிரிழந்தார்.

    காயமடைந்த அனைவரையும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    காலை 6½ மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தினால் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணன் கோவில் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி காரை ஓட்டி வந்த சரவணகுமாரும், அவரது சகோதரர் சந்திரசேகரும் திருப்பூரில் டைனிங் நிறுவனம் நடத்துவதாக விசாரணையில் தெரியவந்தது.

    ×