என் மலர்
நீங்கள் தேடியது "tag 97550"
சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஆட்டோ “டிங்கரிங்” கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரும் மின்வாரிய தற்காலிக ஊழியருமான கோகுல் என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி விஜயகுமார் என்கிற குல்லா விஜி ஆனந்தின் கடையை மறைத்து வரிசையாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதை ஆனந்த், கோகுல் இருவரும் தட்டிக் கேட்டனர் இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மின் வாரிய ஊழியர் கோகுலை சரமாரியாக தாக்கினார். மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த கோகுல் கே.கே நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்திய எம்.ஜி.ஆர் நகர் போலீசார் கோகுலை தாக்கிய விஜயகுமார் அவரது நண்பர்களான கோபி, சூர்யா, தனுசன் ஆகிய 4பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசியது உள்பட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.
இதன் அருகே தமிழக, கர்நாடக எல்லையில் வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 3 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் பணியாளர்கள் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை பண்ணாரி வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் உலாவி கொண்டு இருந்தது. சோதனைச்சாவடியின் முன்பு சாலை நடுவே காட்டு யானை நீண்ட நேரம் நின்றது.
இதனால் சோதனை சாவடியில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே பதுங்கி கொண்டனர். சுமார் 30 நிமிடம் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் சோதனை சாவடி பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதி க்குள் மீண்டும் சென்றது. இதனால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலையில் இரவு நேரத்தில் நடமாடுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆவடி:
குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம வாலிபர் ஒருவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டார். அந்த நேரத்தில் மேலும் 2 வாலிபர்கள் அங்கு வந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்புள்ள மோதிரம், தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் அஜித்குமாரின் செல்போனை பறித்து அவரது வங்கி கணக்கில் இருந்து கூகுள் பே மூலம் ரூ. 13 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்குக்கு அனுப்பினர்.
பின்னர் அஜித்குமாரை முட்புதரில் தள்ளிவிட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறித்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து அஜித்குமார் ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
போரூர்:
கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலை திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன். இவரது மனைவி திலகவேணி. இவர் அமைந்தகரை இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
நான் தற்போது வசித்து வரும் வீட்டை கடந்த 2012-ம் ஆண்டு சகாயராணி என்பவரிடம் இருந்து ரூ. 50 லட்சம் விலை பேசி ரூ. 35 லட்சம் பணம் செலுத்தி வீட்டை கிரையம் செய்து கொண்டேன்.
மீதமுள்ள தொகை ரூ. 15 லடசத்தை 2 வருட தவணையாக தருவதாக அவரிடம் ஓப்பந்தம் போட்டுக் கொண்டேன். அதில் சிறுக, சிறுக ரூ, 5 லட்சம் பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதம் உள்ள ரூ. 10 லட் சத்தை கொடுக்க வேண்டி இருந்தது.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மதியம் என்னை தொடர்பு கொண்ட சகாயராணியின் கணவர் தாஸ் நேரில் பேச வேண்டும் என்று கூறி அழைத்ததன் பேரில் அமைந்தகரை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே நான் சென்றேன்.
அப்போது அங்கு வந்த தாஸ் மற்றும் அவருடன் இருந்தவர்கள் என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சரமாரியாக தாக்கினர்.
பின்னர் ஈ.சிஆர். சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து உடனடியாக ரூ. 10 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மேலும் தாக்கினர்.
அங்கிருந்து தப்பிய நான் ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினேன். என்னை கடத்தி சென்று தாக்கிய தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த வணிக வளாகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
இரணியல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமகணேசன்.
நேற்று ராமகணேசன் மற்றும் போலீசார் மாலையில் காரங்காடு குருசடி பகுதியில் வாகன தனிக்கையில் ஈடு பட்டுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும் டெம்போவில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். மேலும் வாகனத்தில் இருந்த மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அந்த வாலிபர் எந்த தகவலையும் கூற மறுத்து உள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அதில் வாலிபர் ஒருவர் போதையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே டெம்போவில் வந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது சட்டையை கிழித்து கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுகுறித்து இரணியல் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேனியல் சேசுபாதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு டெம்போவில் வந்த குமார், மகேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.
இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.
அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.
மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.
பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (41) என்பவருக்கும், அவரது சகோதரர் ஏழுமலைக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
கடந்த 2-ம்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டபோது, ஏழுமலையின் மருமகன் வடுகசாத்தை சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவர் ரமேஷை ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியதாக நேற்று சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்கு பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எரியோடு:
திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு பகுதியை அடுத்த கோவிலூர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டில் நேற்று வயரிங் பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் குறிக்கோடாங்கி பட்டியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் மாணிக்கம் (வயது 29) என்பவர் ஈடுபட்டு இருந்தார்.
இரவு மாணிக்கம் வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலை வீட்டை பார்க்க சென்ற தங்கவேல், மாணிக்கம் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது பற்றி எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார், எரியோடு இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மின்சாரம் தாக்கி மாணிக்கம் பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குறிக்கோடாங்கி பட்டி பொதுமக்கள் திரண்டனர்.
இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- கரூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் அந்த வழியாக போக்குவரத்து பாதித்தது.
கோபி:
கோபி அடுத்த லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 39) டிராக்டர் டிரைவர். போடி சின்னம் பாளையத்தை சேர்ந்த விவசாயி சுந்தரம் என்பவரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்தார்.
கடந்த 9-ந் தேதி தனது டிராக்டரை ஓட்டி வந்த சிவகுமாரிடம் டிராக்டர் ஓட்டிய வகையில் பாக்கி பணம் ரூ.4 லட்சம் தர வேண்டும் எப்போது தருவாய்? என சுந்தரம் கேட்டாராம். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு முத்தியது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் சிவக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் டிராக்டர் டிரைவர் சிவக்குமார் மனம் உடைந்த நிலையில் இருந்தார். கடந்த 11-ந் தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகுமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து கோபி போலீசார் சுந்தரம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.