என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 99046"

    கொரட்டூர் அருகே 3 பேரை கொலை செய்ய அரிவாளுடன் பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூரை அடுத்த மாதனாங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படைபோலீசார் இன்று காலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.

    அங்கு 7பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்த அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், ஆவடியை சேர்ந்த பிரகாஷ்,புத்தாகரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த இசாக், திருமுல்லைவாயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 மோட்டார் சைக்கிள், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் பெரம்பூரை சேர்ந்த 3 பேரை தீர்த்து கட்ட அரிவாளுடன் பதுங்கி இருந்தது. விசாரணையில் தெரியவந்தது. கைதான பிரகாஷ், பாலகிருஷணன் ஆகியோருக்கும் பெரம்பூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்றுமாலை தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த மோதலில் பெரம்பூரை சேர்ந்த 3 வாலிபர்களையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி நகை வாங்குவது போல் நடித்து தங்க செயினை பெண்கள் திருடி சென்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்கீழ் அலங்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.அவர்கள் நகை வாங்குவது போல் ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தனர்.

    செயின் வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் தங்க செயினை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் செயினை டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர். 

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்  செயினை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாகவில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பரமத்தி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே  உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). விவசாயி. இவரது பாட்டி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். 

    இந்நிலையில் அந்த கூரை வீட்டுக்குள் 6 அடி நிளமுள்ள சாரைப்பாம்பு சென்றுள்ளது.  இதனால் மூதாட்டி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. 

    இதுகுறித்து பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலை–மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை குச்சியால் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
    • ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
    • திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.

    இந்த நிலையில் ஓரு வழக்கில் ஆஜராவதற்காக அலெக்ஸ் தனது ஜீப்பில் நேற்று காலை கும்பகோ–ணம் கோர்ட்டுக்கு ஆதரவா–ளர்களுடன் வந்திருந்தார்.

    ஜீப்பை கோர்ட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அவசர பிரிவு நோயாளிகள் பிரிவு கட்டிடத்துக்கு இடையே நிறுத்தி இருந்தார். மதியம் 1.30 மணியளவில் அவரது ஜீப் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

    ஆனால் முடியவில்லை. ஜீப்பில் எரிபொருள் அதிகமாக இருந்ததால் தீ மள, மளவென பெருகி ஜீப் கொழுந்து விட்டு எரிந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

    தகவல் அறிந்த கும்ப–கோணம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    அரசு ஆஸ்பத்திரி, அர–சுக்கு சொந்தமான அலுவலகங்கள், கோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் உள்ள பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் துணை போலீஸ் சூப்பி–ரண்டு அசோகன் மற்றும் போலீ–சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீப்பில் எப்படி தீப்பிடித்தது? மர்ம நபர்கள் ஜீப்புக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜீப் தீப்பற்றி எரிந்த பகுதியை தடவியல் நிபு–ணர்கள் உடனடியாக வந்து ஆய்வு செய்தனர்.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசா–ரணை நடத்தி வருகி–றார்கள். அலெக்சின் மனைவி ரூபின்சா, கும்ப–கோணம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பி–டத்தக்கது.

    நாட்டறம்பள்ளி அருகே கோவிலில் திருடிய வாலிபரை பொதுமக்கள் துரத்திய போது தவறி கிணற்றில் விழுந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியில் பாரத கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை வாலிபர் ஒருவர் திருடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். பொதுமக்கள் திருடனை துரத்தினர்.

    பொதுமக்கள் துரத்திய போது கிணற்றில் விழுந்தார். அப்போது அங்கிருந்த கிணற்றில் திருடன் தவறி விழுந்தான். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் கொள்ளையனுக்கு காயம் ஏற்படவில்லை.

     நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தான்.பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையனை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த கோழி என்கின்ற மோகன் (வயது45) என்பது தெரியவந்தது. அவர் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஆத்தூர் குப்பம், கல்நார்சம்பேட்டை, அக்ராகரம், வெலக்கல்நத்தம், பச்சூர், புதுப்பேட்டை, மல்லப்பள்ளி உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

    அவரிடமிருந்து உண்டியல் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.

    கோட்டயம் அருகே போலீஸ் நிலையத்தில் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மன்னர்காடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ் (33). காய்கறி வியாபாரி.

    கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் நவாஸ் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் தகராறு செய்தார். இது குறித்து மன்னர்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவாசை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் அடைத்தனர்.

    நேற்று மதியம் நவாஸை கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர். இந்த நிலையில் அவர் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.

    நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை போலீசார் தேடி சென்றனர். அப்போது நவாஸ் போலீஸ் நிலைய கழிவறையில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அவரை மீட்டு கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நவாசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் நவாஸ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து மன்னர்காடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    இந்த தகவல் மாநில டி.ஜி.பி. லோகநாத் ஜெகதாவுக்கு கிடைத்தது. அவர் நவாஸ் மரணம் குறித்து விசாரணை நடத்தவும், அப்போது பணியில் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் கோட்டயம் போலீஸ் சூப்பிரண்டு ஹரி சங்கருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

    போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட நவாஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    திண்டுக்கல் துப்புரவு தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது45). துப்புரவு தொழிலாளி. நேற்று இரவு இவர் தனது உறவினருடன் நாகல்நகர் பகுதிக்கு வந்தார். பின்பு அவர் தனியாக வீட்டுக்கு திரும்பினார். நாகல்நகர் அரண்மனைக்குளம் அருகே சென்றபோது ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் 2 பேர் திடீரென ஆறுமுகத்தை கத்தியால் குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி திண்டுக்கல் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆறுமுகம் கொலைக்கு காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மது குடிக்கும் தகராறில் நண்பர்களே ஆறுமுகத்தை கொலை செய்தது தெரிய வந்தது. ஆறுமுகத்தின் நண்பர்கள் காளிதாஸ், மாரியப்பன். இவர்களும் ஆறுமுகத்துடன் துப்புரவு தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மதுக்கடை பார்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் 3 பேரும் மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது குடித்தனர். அப்போது காளிதாஸ் ஆறுமுகத்திடம் ரூ.20 பணம் கேட்டார். அதற்கு ஆறுமுகம் மறுத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் மதுக்கடை பாரில் வைத்து கைகலப்பில் ஈடுபட்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். எனினும் காளிதாசுக்கு ஆத்திரம் தீரவில்லை.

    இந்நிலையில் பாரை விட்டு வெளியே வந்ததும் ஆறுமுகம் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காளிதாசும் மாரியப்பனும் வந்து ஆறுமுகத்தை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து காளிதாஸ், மாரியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ரூ.20 பணம் கேட்டதற்கு ஆறுமுகம் தர மறுத்து தங்களை தாக்கியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    டி.என்.பாளையம் அருகே இன்று அதிகாலை ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் காட்டை விட்டு வெளியேறிகிறது.

    இது வரை இப்படி வெளியேறும் யானைகள் ஊரையொட்டி உள்ள தோட்டங்களில் மட்டும் தான் புகுந்து வந்தது. விவசாயிகள் அதை காட்டுக்குள் விரட்டி வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை இல்லாத அதிர்ச்சி சம்பவமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒற்றை யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் இந்த யானை அட்டகாசமாக நடந்து சென்றதை பார்த்த அந்த பகுதி மக்களும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அந்த யானை யாரையும் தாக்கவில்லை. எந்த அட்டகாசமும் செய்ய வில்லை. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரேஞ்சர் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை யானையை சத்தமிட்டப்படி விரட்டினர். எருமை குட்டை வழியாக அந்த யானை காட்டுக்குள் புகுந்தது.

    அதிகாலை 2 மணிக்கு புகுந்த அந்த ஒற்றை யானை காலை 6.30 மணிக்கு காட்டுக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைப்பதும் கற்பழிப்பே என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. #supremecourt

    புதுடெல்லி:

    சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தாம்பத்திய உறவிலும் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த டாக்டர் மீது புகார் கொடுத்தார்.

    அதன்படி கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் 2013-ம் ஆண்டு நடந்தது.

    இதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார்.

    டாக்டர் மீதான வழக்கில் கீழ் கோர்ட்டு அவர் மீது கற்பழிப்பு குற்றப்படி 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இறுதியாக டாக்டர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் நாகேஷ்வரராவ், எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

    அப்போது டாக்டர் தரப்பில் வாதாடிய வக்கீல் சம்பந்தப்பட்ட டாக்டர் அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் தாம்பத்திய உறவு வைத்திருந்தார். இது கற்பழிப்பு குற்றமாக கருத முடியாது என்று வாதாடினார்.

    அதற்கு நீதிபதிகள், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி கற்பழிப்பு குற்றத்தை உறுதி செய்தார்கள். 10 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

    ஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொண்டது கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    குற்றவாளியான டாக்டருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. அதை மறைத்து சம்பந்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தாம்பத்திய உறவு வைத்து இருக்கிறார்.

    அதாவது வேண்டும் என்றே திட்டமிட்டு அந்த பெண்ணை ஏமாற்றி நம்ப வைத்து தனது பசிக்கு விருந்தாக்கி இருக்கிறார்.

    பெண்ணின் கற்பு என்பது சாதாரண வி‌ஷய மல்ல, கற்பழிப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது. கொலை நடக்கிறது என்றால் ஒருவருடைய உடல் அழிக்கப்படுகிறது.

    ஆனால், கற்பழிப்பில் ஒரு பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது. அவருடைய மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. உதவியற்ற ஆன்மாவாக அவர் சுற்றித்திரிய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஒரு மிருகத்தின் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த பாதிப்பு தொடர்கிறது.

    எனவே, கடுமையான குற்றத்தின் அடிப்படையில் கற்பழிப்பு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியுள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்து அவர் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் கூட அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அழிந்து போவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். #supremecourt

    சத்தியமங்கலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நிவேதா (வயது 20).

    இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். தந்தை பெயர் வீரசேகர் விவசாயி. சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த நிவேதா ஆஸ்பத்திரியின் பின்னால் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நிவேதா மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். பிறகு யாரும் இல்லாத ஒரு வார்டு அறையில் உள்ள பேன் கம்பியில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வார்டு அறை தனி அறையாக யாரும் செல்லாத அறையாக இருந்ததால் உடனடியாக இதை யாரும் கவனிக்கவில்லை.

    சில மணி நேரம் கழித்து சக ஊழியர்கள் நிவேதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய நிவேதா உடலை போலீசார் மீட்டு பிரேதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நிவேதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதனால் காதல் விவகாரம் தொடர்பாக நர்சு நிவேதா தற்கொலை செய்து இருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரியலூர் அருகே நண்பனை கொன்று நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோவிந்தசாமி (வயது 29). இவர் கடந்த 24-ந்தேதி இரவு ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில், ராங்கியம் கிராமப்பகுதியில் தலையில் காயத்துடன் சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.

    இந்தநிலையில் கோவிந்த சாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த வேணு கோபால் மகன் வேல்முருகன் (26) மற்றும் சிலர் கோவிந்த சாமியை கொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவிந்தசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    கோவிந்தசாமியும், வேல் முருகனும் நண்பர்கள். சம்பவத்தன்று மது வாங்கி தருமாறு கோவிந்தசாமி, வேல் முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேல் முருகன் இரும்பு கம்பியால் கோவிந்தசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.

    இதில் அவர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம், வேல்முருகன், கோவிந்தசாமியின் முகவரியை கூறியதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துள்ளார். போலீசார் விசாரணையில் வேல்முருகன் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாயல்குடி அருகே ஏடிஎம் பணம் 1.20 கோடி கொள்ளை போனதாக கூறப்பட்ட புகாரில் பணத்தை கொண்டு சென்ற பாதுகாப்பு ஊழியர்களே அதனை திருடி நாடகமாடியது தெரிய வந்துள்ளது. #AtmMoneyRobbery

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

    நேற்று சிவங்கையைச் சேர்ந்த அன்பு (வயது28), திருப்பாலைக்குடி வீரபாண்டி (54), இளையான்குடியைச் சேர்ந்த குருபாண்டி (22) மற்றும் சத்திரக்குடியைச் சேர்ந்த டிரைவர் கபிலன் (23) ஆகியோர் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்ப ரூ.1 கோடியே 60 லட்சத்தை கொண்டு சென்றனர்.

    இதில் ரூ.40 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்பிய அவர்கள் மீதம் உள்ள பணத்தை சாயல்குடி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பாதுகாப்பு வேனில் சென்றனர்.

    கடலாடி அருகே உள்ள மலட்டாறு பகுதியில் வேன் சென்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததாகவும், அப்போது மர்ம நபர்கள் வேனில் இருந்த ரூ.1 கோடியே 20 லட்சத்தை திருடிக்கொண்டு சென்றதாக பணத்தை கொண்டு சென்ற 4 ஊழியர்களும் சாயல்குடி போலீசில் புகார் தெரிவித்தனர்.


    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் மற்றும் போலீசார் 4 ஊழியர்களையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4 பேரும் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து 4 பேரையும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு 4 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வேனை கவிழ்த்து விட்டு பணத்தை இவர்களே எடுத்துக் கொண்டு திருடு போனதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அன்பு, வீரபாண்டி, கபிலன், குருபாண்டி ஆகிய 4 பேரையும கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.32 லட்சத்தை கைப்பற்றினர். மீதமுள்ள பணம் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #AtmMoneyRobbery

    ×