என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu"

    • கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. மசோதாவை மத்திய அரசு கைவிடக் கோரும் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்மொழிகிறார்.

    வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருகிறது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்து வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிக்க வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    • கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.
    • 24,80,45,828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

    இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் 14 லட்சம் பள்ளிகளில் சுமார் 61.6 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் 28.3 சதவீதம் பள்ளிகளில் இரண்டு மொழிகளும், 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி கற்பிக்கப்பட்டு வருவது மத்திய கல்வித்துறை வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 3.2 சதவீத பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி வெளியிட்ட தகவல்களின் படி, "1471891 இந்திய பள்ளிகளில் 61.6 சதவீதம் பள்ளிகளில் 74.7 சதவீத மாணவர்கள் அதாவது 248045828 பேருக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன."

    "மொத்தமாக உள்ள இந்திய பள்ளிகளில் 28.3 சதவீதம் பள்ளிகளில் 16.8 சதவீதம் மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதில் 10.1 சதவீதம் பள்ளிகளில் ஒற்றை மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் அருணாசல பிரதேசத்தில் 0.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. நாகாலாந்தில் 2.5 சதவீதமும், தமிழ்நாட்டில் 3.2 சதவீதம் பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே மூன்று மொழிகளில் கற்பிக்கும் முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் 97.6 சதவீத பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன என்று மத்திய கல்வித்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    • இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார்.

    தமிழக சட்டசபையில் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்த மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.

    இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.

    அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.

    இன்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.

    • இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
    • பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.

    சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    திருப்பதி:

    ரெயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற இருந்தது.

    இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து சுமார் 50,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6000 பேருக்கு தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில் மற்றும் பஸ்களில் பலர் மணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

    ஆனால் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    அங்கிருந்து அதிகாரிகள் பலரும் தெலுங்கில் பேசினர். இதனால் தமிழக வாலிபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

    இது குறித்து மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்:-

    தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6000 பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வருவதற்காக நாங்கள் பஸ்களில் பல மணி நேரம் தூக்கத்தை இழந்து பயணம் செய்து இங்கு வந்தோம்.

    தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு வழியாக ஆட்டோ மூலம் தேர்வு வந்தடைந்தோம். ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து விட்டனர்.

    தமிழகத்திலேயே இது போன்று ரத்து செய்யப்பட்டிருந்தால் நிம்மதியுடன் வீடு திரும்பி இருப்போம்.

    தற்போது நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதால் மீண்டும் வீடு திரும்பவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்களுக்கு பண விரயமும் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற 6 ஆயிரம் பேரும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார். 

    • எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் குற்றச்சாட்டு
    • இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.

    மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது

    MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்

    கனிமொழி அவர்களும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

    அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.

    இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.

    இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல

    இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீசக்தி திரையரங்கம் அருகில் நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். வடக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான தினேஷ் குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கழக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேசியதாவது :- இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முதன்மை கொள்கையாகும். இந்தி எதிர்ப்பு போராட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்தியை மக்களிடம் திணிக்கக்கூடாது. இருமொழிக்கொள்கை இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் வகையில் பாடங்கள் அமைந்துள்ளது.

    இந்தியை எந்த காலத்திலும் திணிக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகிறார். கனமழை பெய்தபோதும் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளார். தொழில் நகரான திருப்பூரில் நூல் விலை உயர்வால் தொழில் பாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நூல் விலை படிப்படியாக குறைந்து தொழில் நடக்கிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்ல இப்போது இருந்தே பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், தெற்கு மாநகர பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகிகள் திலகராஜ், சிவபாலன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.
    • இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 3552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான தேர்வு 27.11.2022 அன்று நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச மாதிரித்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை )மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இத்தேர்வானது ஓ.எம்.ஆர். சீட் கொண்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தபடும் தேர்வு போன்று முழுபாடத்திட்டத்திற்கு நடைபெறுகிறது.

    இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் https://forms.gie/bcVCeHCVVwfVtafe9 என்ற Google Form Link -இல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணிமுதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் அல்லது நுழைவுசீட்டு மற்றும் இரண்டு பாஸ்போர்ட்அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்கவேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள்தேர்வு எழுத அனுமதிக்கப்ப டமாட்டார்கள்.

    மாதிரித்தேர்வுகள் தொடர்பான விபரங்களை 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
    • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர் ‌‌. அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 3552 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த எழுத்து தேர்வு நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தேர்வுக்காக 12 ஆயிரத்து 217 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.மாவட்டத்தில் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி உள்பட 7 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

    தேர்வுக்காக காலை 9 மணிக்குள் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய எழுத்து தேர்வு மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. இதை முன்னிட்டு தேர்வு மையங்களில் அனைத்துவித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறும்.

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செயல்முறை இருக்கும். தேர்வர்கள் இந்த 100 மதிப்பெண்களுக்கு பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது.

    • தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி கூறினார்.
    • கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம்

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம். கள்ளுக்கான தடையை அகற்றும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதுவும் வெற்றி பெறும். தென்னை மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீராவுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருந்தால் அவற்றில் இருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கியும், விற்றும், குடித்தும் கொள்ளலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்தி உள்நாட்டிலும், பன்னாட்டிலும் விற்க வழி செய்யலாம். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு வருமானம் கிடைக்கும். தமிழகம் முதல் மாநிலமாக மாறும். முதல்-அமைச்சர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×