என் மலர்
நீங்கள் தேடியது "Vaikasi Thiruvizha"
- வைகாசி விசாக வசந்த திருவிழா 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
- 1-ந்தேதி, 3-ந்தேதி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.
10-ம் நாளான வருகிற 2-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.
அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.
பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.
இதேபோல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்த மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும்
- இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் சூரிய பகவான், மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் தனது பயணத்தை துவங்குவார்.
இந்த மாதத்தில் கங்கை போன்ற புண்ணிய நதிகளில் நீராடினால் ஏழேழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் கூட நீங்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15 ம் தேதி துவங்கி, ஜூன் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.
இந்த மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத விசேஷ, விரத நாட்கள் :
வைகாசி 01 (மே 15) திங்கட்கிழமை - ஏகாதசி
வைகாசி 03 (மே 17) புதன்கிழமை - பிரதோஷம்
வைகாசி 05 (மே 19) வெள்ளிக்கிழமை - அமாவாசை
வைகாசி 09 (மே 23) செவ்வாய்கிழமை - சதுர்த்தி
வைகாசி 11 (மே 25) வியாழக்கிழமை - வளர்பிறை சஷ்டி
வைகாசி 17 (மே 31) புதன்கிழமை - ஏகாதசி
வைகாசி 18 (ஜூன் 01) வியாழக்கிழமை - பிரதோஷம்
வைகாசி 19 (ஜூன் 02) வெள்ளிக்கிழமை - வைகாசி விசாகம்
வைகாசி 20 (ஜூன் 03) சனிக்கிழமை - பெளர்ணமி
வைகாசி 24 (ஜூன் 07) புதன்கிழமை - சங்கடஹர சதுர்த்தி
வைகாசி 25 (ஜூன் 08) வியாழக்கிழமை - திருவோணம்
வைகாசி 26 (ஜூன் 09) வெள்ளிக்கிழமை - தேய்பிறை சஷ்டி
வைகாசி 31 (ஜூன் 14) புதன்கிழமை - ஏகாதசி
வைகாசி 32 (ஜூன் 15) வியாழக்கிழமை - கிருத்திகை, பிரதோஷம்.
- வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
- வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம்.
தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)
வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)
வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)
வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)
வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை
வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை
வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை
வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை
வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் :
வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- 7-ந் தேதி தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும். தினசரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய திருவிழாவாக வருகிற 30-ந் தேதி காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, இரவு பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 6-ந் தேதி தேரோட்டம், 7-ந் தேதி இரவு வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.
விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார், தூய்மைப்பணி ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றன. திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒரு பாதையும், வைகை ஆற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இன்று கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
- 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவில், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக விவேகானந்தபுரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. பின்னர் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள். நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
- விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றப்பட்டு 17 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு நேற்று இரவு அர்ச்சகர் சண்முகவேல் திருவிழா கொடியேற்றம் பொருட்களுடன் மேளதாளத்துடன் நான்குரதவீதி வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா, சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெருவிளக்கு ஏற்பாடுகள் சோழவந்தான் பேரூராட்சி செய்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினார்கள்.
- 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
- 2-ந் தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
26-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் ஜனா.யுகேந்த், கிருஷ்ண நாமமணி ஆனந்த், ஜனா.வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருவதும் நடக்கிறது.
2-ம் நாள் இரவு அய்யா வைகுண்டசாமி பரங்கி நாற்காலியிலும், 3-ம் நாள் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்திலும்,. 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்திலும், 6-ம் நாள் கற்பக வாகனத்திலும் 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஜூன் மாதம் 2-ந் தேதி 8-ம் நாள் திருவிழாவன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
9-ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) 11-ம் நாள் திருவிழாவன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை, பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் தலைமை பதி வளாகத்தில் காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
- இந்த விழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன.
- 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இதற்கான விழா நேற்று 23-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியாக அன்று காலை 5 மணி அளவில் கணபதி வழிபாடு, விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று, அன்று மாலை 6 மணிக்கு மேல் திருவிளக்கு பூஜை நடைபெற்றன.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வேண்டுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று(புதன்கிழமை) சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு 7 மணிக்கு மேல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல் வைபவம் நடைபெற உள்ளன.
தொடர்ந்து 2-ந்தேதி காலை 7.20 மணிக்கு மேல் பால்குடம், காவடி, ரதகாவடி, சிலாகைக் காவடி, பறவை காவடி, மயில் காவடியும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவு, நாட்டியாஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளன. 2-ந்தேதி விசாகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர்கள் நா.சி.அ. சிதம்பரநாதன் ஆச்சாரி, மீ.ச. லோகநாதன் ஆச்சாரி ஆகியோர்கள் தலைமையில் கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் யோகேஸ்வரன், உதவி தலைவர் நாகநாதன், செயலாளர் பாலமுருகன், உதவிச்செயலாளர் செல்வ முனிஸ்வரன், பொருளாளர் மகாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் இளைஞர்கள் செய்து வருகிறார்கள்.
- வைகாசியில் குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
- வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும்.
வளம் தரும் வைகாசி மாதத்தை "மாதவ மாதம்' என்பர். மாதங்களுக்குள் உயர்ந்த புனித மாதம் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனை வைகாசம் என்றும் வடநாட்டில் வைசாக எனவும் குறிப்பர், வைகாசி என்பதை விசாகம் என்றும் சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் வடமொழியில் வைசாகம் ஆனது.
இம்மாதத்தில் புனித நதியில் நீராடி திருமாலை வழிபட்டு துளசியால் பூசை செய்தால் நற்பேறுகள் பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. வைகாசியில் குல தெய்வ வழிபாடு செய்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
முருகப்பெருமான், நரனும் சிங்கமும் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, புத்த மதத்தை தோற்றுவித்த கவுதம புத்தர் மற்றும், பாப புண்ணிய கணக்கிட்டு மனிதனின் வாழ்நாளை முடிவு செய்யும் எமதர்மன் ஆகியோர் வைகாசி மாதத்தில் தான் அவதாரம் செய்தனர். வைகாசி விசாகத்தில் எமதர்மராஜன் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. எமதர்மராஜன் தொடர்புடைய ஸ்ரீ வாஞ்சியம், திருச்சி அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வைகாசி மாத மூலநட்சத்திர நாள் திருஞானசம்பந்தரின் திருநட்சத்திர தினம். அன்று ஆச்சாள் புரத்தில் திருஞானசம்பந்தர் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். மே 24-ந் தேதி திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குருபூஜையாகும். 25-ந் தேதி சேக்கிழார் குருபூஜை அவரது ஊரான குன்றத்தூரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும்
ஆதிசங்கரர் வைகாசி பஞ்சமியிலும்,காஞ்சி மகாபெரியவர் அவதரித்ததும் வைகாசி பவுர்ணமியேயாகும். சிவபெருமான் உலகைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டது வைகாசி வளர்பிறை துவாதசியில் தான், எனவே வைகாசி பிரதோஷங்கள் சிறப்பு வேண்டி வழிபட வேண்டிய நாட்களாகும். வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியது.
வைகாசி மாதம் சிவபெருமானை போற்றி கடைப்பிடிக்கப்படும் விரதம்"ரிஷப விரதம்" ஆகும். வைகாசி வளர்பிறை அஷ்டமியில் இடபத்தில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மையப்பரான உமா மகேஸ்வரரை நினைத்து பின்பற்றப்படும் விரதமுறையாகும். இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நமது பாவங்கள் நீங்கும். இந்த விரதம் கடைப்பிடித்தால் வாகன யோகம் மற்றும் வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்க வல்ல விரதம் இது. மேலும் விவசாய சம்மந்தமான வாகனங்களின் சேர்க்கையும் ஏற்படும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. இந்த விரதத்தினால் வாகனயோகம் அடையலாம்.புதிய வாகனம் வாங்குவோர் அல்லது பதிவு செய்வோர்க்கு நற்பலன் உண்டு ரிஷப விரதத்தைக் கடைப்பிடித்து இந்திரன் ஐராவத்தையும், குபேரன் புஷ்பக விமானத்தையும் தங்களது வாகனமாகப் பெற்றார்கள் என்று புராணம் கூறுகின்றது. அன்று சிவனுக்கு பழங்கள் நிவேதித்து பகற்பொழுதில் விரதமிருந்து பிரதோஷ வேளையில் தரிசனம் செய்து முழு இரவு தொடங்கியதும் உணவு உண்ண வேண்டும். வைகாசி வளர்பிறை அஷ்டமி மே 27-ந் தேதி சம்பவிக்கிறது.
வைகாசி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை அணிவித்து, 108 பத்ம ராகக் கற்களாலான மாலை அணிவித்து, எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பத்மராகக் கல் மாலைக்கு பதிலாக முழு மல்லிகை மாலை அணிவித்தும் வழிபாடு நடத்தலாம்
வைகாசியில் வைகுந்தனை நினைத்து வழிபட சுகபோக வாழ்க்கை கிட்டும், வைகாசி சுக்ல சதுர்த்தசியில்தான் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலா தனுக்காக ஒரு நொடிப்பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். வைகாசியில் புனித தீர்த்தங்களில் நீராடி திருமாலை துளசியால் வழிபட நற்பேறுகள் கிடைக்கும்.நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பிகள் அவதரித்த மாதம் வைகாசியாகும்.இம்மாதத்தில் இறைவனை வழிபாடு செய்ய ஆயுள் விருத்தி , செல்வம் பெருகல் புத்திரப்பேறு ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும்
கவுதமபுத்தர் அவதரித்ததும் கயாவில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றததும், மோட்சம் அடைந்ததும் வைகாசி பவுர்ணமியில் என்பதால் வைகாசி பவுர்ணமியை பவுத்தர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில்கொண்டாடுகின்றனர்.
புன்னாக கவுரி விரதம் என்பது மன சஞ்சலங்கள் நீங்கி நலமுடன் வாழ பெண்கள் கொண்டாடும் நாளாகும் புன்னாக மரத்தடியில் கவுரியை எழுந்தருள்வித்து வழிபாடு செய்து சர்க்கரைப் பொங்கல் படைக்கும் விரதம் மே 20-ந் தேதியும், கதலி கவுரி விரதம் சுக்கிர கிரக தோஷத்தால் தள்ளிப்போகும் திருமணம் மக்கட் பேறு ஆகியவை கை கூட மே 23-ந் தேதி மேற் கொள்ளலாம். வாழை மரத்தடியிலோ அல்லது பூசை அறையிலோ வாழைக் கன்றுகளிடையே கவுரிபடத்தை வைத்து 18 அல்லது 108 வாழைப்பழங்கள் படைத்து குழந்தைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் கொடுக்க பலன் உண்டாகும்.
ரம்பா திருதியை மே 22-ந் தேதி வருகிறது சாபத்தால் அழகும் கவுரவமும் இழந்த ரம்பை இந்திரனிடம் பரிகாரம் கூற கேட்க 'பூலோகத்தில், பார்வதிதேவி கவுரியாக அவதரித்து மகிழமரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கும் தேவியை விரதமிருந்து வழிபட்டால், அருள் கிடைக்கும் என கூறினார்.பூலோகத்தில் ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது. வைகாசி மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாகனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, காட்சி தந்து மீண்டும் தேவலோக முதல் அழகியாக அருள் புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர அருளினாள். அவள் மேற்கொண்ட இந்த விரதம் "ரம்பா திருதியை" என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் சகல் சவுபாக்கியமும் அதிகரிக்குமென்றும் அருளினாள்.
பாபஹர தசமி அல்லது தசஹர தசமி இவ்வாண்டு மே 30-ந் தேதி வருகிறது. வைகாசி அமாவாசைக்குப் பின் வரும் சுக்லபட்ச தசமி திதி அந்நாள் பத்து வித பாவங்களைப் போக்கக் கூடியதாகும். ஸ்ரீ ராமர் ராவணனைக் கொன்ற பாவத்தை நீக்கிக் கொள்ள, சேதுக்கரை ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி எனும் மணல் லிங்கம் பிரதிஷ்டை செய்து இந்நாளில் வழிபட்டார் என "ஸ்ரீ காந்தம்" என்ற நூல் குறிப்பிடுகிறது. அன்று அவரவர் வசிக்கும் ஊருக்கு அருகிலுள்ள புனித நதியிலோ, குளத்திலோ நீராடலாம். நதியிலும் குளத்திலும் நீரில்லாது போனாலும், சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து இனிமேல் பாவங்கள் செய்யமாட்டேன்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வீட்டில் துளசி, வில்வ இலைகள் சேர்ந்த நீரில் வடக்குதிசை நோக்கிக் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாத்திரம் கூறுகிறது. அன்று அன்னதானம் செய்வது ஏழை எளியவர்களுக்கு ஆடைகள் தானம் செய்வதும் பாபங்கள் சேர்ந்து புனிதம் சேர வழிவகுக்கும்.
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய ஒரு நட்சத்திரமாகும். இந்நாள் சோதி நாள் எனப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்க சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். முருகபக்தர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் அவதரித்தார். அன்று ஆழ்வார் திருநகரியில் நவகருட சேவை நடைபெறும். நமது பாவங்கள் நீங்கி நமக்கு நலன் பிறக்கத்துவங்கும் மாதம் வைகாசி. இறை வழிபாடு நமக்கு மகிழ்ச்சியை நல்கத் துவங்கும், கால சுழற்சியும் கடும் கோடையில் இருந்து அடுத்த பருவத்துக்கு நகரத்துவங்கி வளம் சேர்க்கத் துவங்கும் மாதமாகும்.
- 1-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 2-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கலியுக கடவுளான முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று.
உலக உயிர்களின் இன்னல்களை அழிக்க, வைகாசி மாதத்தில் பவுர்ணமியையொட்டி வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாகும்.
சிறப்பு வாய்ந்த இத்திருவிழா, பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலையில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியால் ஆன காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் 6-ம் நாளான ஜூன் 1-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவுலாவும் நடைபெறுகிறது.
7-ம் நாளான ஜூன் 2-ந்தேதி வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதையடுத்து காலை 9 மணிக்கு திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. பின்னர் இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு சமய சொற்பொழிவு, இன்னிசை, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- 2-ந்தேதி திருத்தேர் உற்சவம் நடக்கிறது.
- 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கும், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று முதல் காலை மற்றும் மாலை இரு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் முருகர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி மயில்வாகன வீதி உலாவும், ஜூன் 2-ந்தேதி திருத்தேர் உற்சவமும், ஜூன் 3-ந்தேதி வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
- வசந்த உற்சவம் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.
- 2-ந்தேதி சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடக்கும். 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபம் என்று அழைப்பர். 333 அடி நீளம், 105 அடி அகலம், 25 அடி உயரம் கொண்ட இந்த மண்டபத்தில் 4 வரிசைகளில் 125 தூண்கள் உள்ளன. மேலும் மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.
வைகாசி வசந்த உற்சவத்தின் போது மீனாட்சி, சுந்தரேசுவரர் இந்த மேடையில் எழுந்தருளி காட்சி தருவார். அப்போது கோடை காலமாக இருப்பதால் சூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமிக்கு வெப்பத்தை தணிக்க அந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்புவதற்காக அகழி வெட்டப்பட்டது. சுற்றிலும் தண்ணீரால் சூழ்ந்த இந்த மண்டபத்தை நீராழி மண்டபம் என்றும் அழைப்பர்.
மேலும் இந்த மண்டபத்தில் புராண கதைகளை தெரிவிக்கும் வகையில் வடிவமைத்த சிலைகள், எங்கும் காணமுடியாத சிவனின் திருவிளையாடல் புராணத்தை விளக்கும் சிலை வடிவங்கள், நாயக்கர் காலத்தை சிறப்பிக்கும் வகையில் செதுக்கப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள் உள்ளன. திருமலைநாயக்கர் காலத்தில் இருந்து வசந்த உற்சவம் இங்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருவிழா நாட்களை தவிர இந்த மண்டபம் பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது. பின்பு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், இரும்பு மற்றும் சில்வர் பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது. வணிக மண்டபமாக மாறியதால் அங்குள்ள சிறப்புகள் நாளடைவில் பக்தர்களுக்கு தெரியாமல் போனது.
எனவே தொல்லியல், சுற்றுலா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை இணைந்து அந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கி வருகிற ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி 1-ம் திருநாள் முதல் 9-ம் திருநாள் வரை மீனாட்சி, சுந்தரேசுவரர், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எனும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு தினமும் மாலை 6 மணி அளவில் நடக்கும். அதை தொடர்ந்து கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு புது மண்டபம் சென்று, அங்கு வீதி உலா- தீபாராதனை நடத்தப்படும்.
பின்பு சுவாமிகள், 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்து கோவிலை சென்றடைவர். வருகிற 2-ந்தேதி அன்று காலையிலேயே சுவாமிகள் புது மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். அன்றைய தினம் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி உலா நடைபெறும். மேலும் மண்டபத்தை சுற்றி கடந்த ஆண்டு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. ஆனால் இந்தாண்டு மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பணிகள் நடப்பதால் தண்ணீர் நிரப்பப்பட வில்லை. மேலும் அரசு உத்தரவின்படி புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் அடுத்தாண்டு தண்ணீர் நிரப்பி திருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.