search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Train"

    • வந்தே பாரத் ரெயிலில் கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • ரெயில்வே அதிகாரிகள் பயணியிடம் மன்னிப்பு கேட்டனர்.

    நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு கொடுத்த சாம்பாரில் வண்டுகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சாம்பாரில் வண்டுகள் இருந்தது தொடர்பாக பயணி புகாரளித்தபோது அது 'சாம்பாரில் போடும் சீரகம்' என ரெயில்வே அதிகாரிகள் புது விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து சக பயணிகளும் சாம்பாரில் இருந்தது வண்டு தான் என உறுதிப்படுத்தியதை அடுத்து அவர்கள் பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் வண்டுகள் இருந்த உணவை விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு தெற்கு ரெயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

    • எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் - மைசூரூ, சென்ட்ரல் - கோவை, எழும்பூர் - நெல்லை, சென்ட்ரல் - விஜயவாடா, கோவை - பெங்களூர், எழும்பூர் - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மைசூரூ - சென்ட்ரல் என 8 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    இதில், எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் 28-வது வந்தே பாரத் ரெயிலாகும். தமிழகத்தின் 3-வது வந்தே பாரத் ரெயிலாகும். இந்த வந்தே பாரத் ரெயில் சேவை, தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றைடைகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 530 பேர் பயணிக்க முடியும். 5 சாதாரண சேர்கார் பெட்டிகள், ஒரு எக்சிகியூட்டிவ் சேர்கார் பெட்டி மற்றும் 2 பக்கமும் டிரைவர் கார் பெட்டிகள் கொண்டதாக இவை உள்ளது.

    பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால் இந்த வந்தே பாரத் ரெயிலில் டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. காத்திருப்போர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. எனவே, எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலின் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில், எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8-ல் இருந்து 16 ஆக உயர்த்த மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்த கடிதத்துக்கு ரெயில்வே வாரியத்திடம் இன்னும் ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை.

    ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுதாக பயணம் செய்ய முடியும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் இட்டாவாவில் நடைபெற்ற வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழாவின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் கடும் நெரிசல் காரணமாக தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

    இட்டாவாவில் ஆக்ரா- வாரணாசி வந்தே பாரத் விரைவு ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரிதா படோரியா தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் விரைவாக செயல்பட்டு படோரியாவை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும்.
    • ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும்.

    ராஞ்சி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் சென்றார். ராஞ்சியில் அவர் 6 புதிய வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார்.

    டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-அவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-அவுரா, கயா-அவுரா ஆகிய 6 புதிய வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.

    அங்குள்ள டாடாநகரில் இருந்து பிரதமர் மோடி வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் அங்கு செல்ல முடியவில்லை. இதை தொடர்ந்து ராஞ்சியில் இருந்து காணொலி வாயிலாக 6 புதிய வந்தே பாரத் ரெயில்களையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து மோடி ரூ.660 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் பயனாளிகளுக்கு அனுப்பி கடிதங்கள் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டுவதற்கு முதல் தவணையாக ரூ.32 கோடியை விடுவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    6 புதிய வந்தே பாரத் ரெயில்கள், திட்டங்கள் ரூ.650 கோடி, இணைப்பு மற்றும் பயண வசதிகள் விரிவாக்கம், மற்றும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு ஆகிய திட்டங்களுக்காக ஜார்கண்ட் மக்களை நான் வாழ்த்துகிறேன்.

    ஜார்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. ஆனால் தற்போது பல திட்டங்களால் இங்கு முன்னேற்றம் காண முடிகிறது. பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.

    கிழக்கு இந்தியாவில் ரெயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியமும் வளர்ச்சி அடையும். ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரெயில்வே மேம்பாட்டுக்கான பட்ஜெட் ரூ.7000 கோடி ஆகும். இதை 10 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இது 16 மடங்கு அதிகம்.

    ரெயில்வே இணைப்பு நெட்வொர்க்கில் 100 சதவீதம் மின்மயமாக்கல் உள்ள மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். 50-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஜாம்ஷெட்பூருக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    அவர் நாளை குஜராத் மாநிலத்திற்கும், நாளை மறுநாள் ஒடிசாவுக்கும் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.
    • கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை.

    வந்தே பாரத் ரெயில்கள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் உதவும்.

    புதிய வந்தே பாரத் ரெயில் சேவையால் தொழில்கள் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

    கோவில் நகரம் மதுரை, ஐடி நகரம் பெங்களூரு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை பெருமிதம் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    • பிரதமர் மோடி 31ந்தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
    • சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும் மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

    சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.

    மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ் வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.

    மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.

    இந்தரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

    இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.
    • 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூரு என 5 ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் கூறும்போது, 'நாகர்கோவில்-சென்னை எழும்பூர், மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையில் இயக்கப்பட உள்ள 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது' என்றார்.

    இதன்படி வருகிற 31-ந் தேதி டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி இந்த 2 ரெயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரெயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸ்க்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரெயிலாக இது இருக்கும்.

    தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.

    • ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்றபோது ரெயிலில் இருந்த பயணியின் செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    வந்தே பாரத் ரெயிலின் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்பவர் செல்போன் சார்ஜ் போட்டிருந்தபோது திடீரென வெடித்தது.

    செல்போன் வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பின்னர் ரெயில் பெட்டிகளின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டது.

    பயணிகளுக்கு எந்தபாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சுமார் 35 நிமிடங்கள் காலதாமதமாக வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் சார்ஜ் போட்டபோது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்போன் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம்.
    • ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை-மைசூரு செல்லும் வந்தே பாரத் ரெயில் இன்று காலை 8 மணி அளவில் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது ரெயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த குஷ்நாத்கர் (வயது 31) என்பவர், தனது செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தி வந்தார். திடீரென செல்போன் சூடாகி, பயங்கர சதத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த வடமாநில வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார்.

    செல்போன் வெடித்த போது புகை கிளம்பியதால் அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதால், ரெயில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, 2 ரெயில் பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றினர்.

    இதன்பிறகு ரெயில் 35 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.
    • தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன.

    சென்னை:

    அதி நவீன சொகுசு மற்றும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலான வந்தே பாரத் சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழகத்திலும் 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    2018 முதல் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் ஐ.சி.எப். இதுவரையில் 70 ரெயில்களை தயாரித்து உள்ளது. 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் சுமார் 75 ஆயிரம் பெட்டிகளை தயாரித்துள்ளது.

    இந்த நிதியாண்டில் 1,536 எல்.எச்.பி. பெட்டிகள் மற்றும் 650-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் உட்பட 3,515 ரெயில் பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது.

    தற்போது 5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு பெட்டிகள் தயாராக உள்ளன. அவற்றை விரைவில் இயக்கவும் எந்த நகரங்களுக்கு அவை செல்கிறது என்பதும் ரெயில்வே வாரியம் தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ஆரஞ்சு நிற ரெயில்களின் இறுதி ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐ.சி.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும்.

    தற்போது வந்தே பாரத் ரெயில்களில் 8 அல்லது 16 பெட்டிகள் உள்ளன. எதிர் காலத்தில் 20 மற்றும் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோவின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

    • ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    • சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது.
    • நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது.

    சென்னை:

    இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி முதல் 100 நாள் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அவர் இன்று நாடு திரும்பி உள்ளார்.

    அடுத்து அவர் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கி இருக்கிறார். முதல் 100 நாளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகிற 18-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் தமிழகம் வர உள்ளார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 10 மணிக்கு பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்ற உள்ளார்.

    சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

    இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற உள்ளது.

    நெல்லை மாவட்டம் மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரை 102 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.1,752 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

    அதில் தற்போது ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம்-நெல்லை இரட்டை வழி தடத்தையும், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை வழி தடத்தையும் பிரதமர் மோடி அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது. இந்த பணிமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் நெய்வேலியில் 3 திட்டங்களை அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் இருக்கிறார்.

    நெய்வேலி 30-வது வட்டம் ஞாயிறுசந்தை அருகே 10 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அதுபோல நெய்வேலி சுரங்கம் 1-ஏ அருகே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான மேல்மணல் நீக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

    மேலும் நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    விழாவில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னக ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதல் முறையாக சென்னை வர இருப்பதால் அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ×