என் மலர்
நீங்கள் தேடியது "திருக்கல்யாணம்"
- சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
- பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜை யுடன் தொடங்கி நடை பெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது 3.30-க்கு விஸ்வ ரூப தரிசனம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 6 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு சன்னதி தெரு, வீரராகவ புரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தபசு மண்ட பத்திற்கு வந்து சேர்ந்தார்.
அப்போது அம்மன் சப்பரத்திற்கு முன்பு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகி மற்றும் பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.
காலை 9 மணிக்கு உச்சி கால தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
8-ம் திருவிழாவான நாளை இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.
9,10,11 ஆகிய 3 திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
- சித்தரகுப்தருக்கு உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் உள்ளது.
- சித்திர குப்தரை வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.
இந்துக்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவ- புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தருடையது.
புராண வரலாறு
புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும், நல்லொழுக்கமும் தர்மமும் அதிகம் இருக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், ஈடுபவர்களும், நற்செயல்கள் செய்பவர்களையும் கண்காணிக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில் சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார் எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.
இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது. சித்திரத்தில் இந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து, சித்திரகுப்தரிடம் மக்களின் பாவ-புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது புராண கால நம்பிக்கையாக உள்ளது.
வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது.
ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
அமைவிடம்
சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.
சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.
இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள் சித்தரகுப்தரை வணங்கி வந்தால், வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை
சித்ரா பவுர்ணமி
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடிவு பிறந்து, ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும் ஓரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில் விழாவின் 8- நாளான நேற்று, காலை 9.30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை உற்சவர் பெருமான் குதிரை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார்.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.
ஞாயிறு விடுமுறை மற்றும் சித்திரை பிரம்மோற்சவம் என்பதால் நேற்று காலையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பொது வழியில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசித்தனர்.
மலைப்பாதையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திரண்டதால் அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நாளை தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது. 18-ந்தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 19-ந் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. நேற்று இரவு தங்கக்குதிரை வாகனம், காமதேனு வாகனத்தில் சாமி, அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் சுவாமி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேல் தேர்க்கால் பார்த்தல் மற்றும் நடராஜர் புறப்பாடு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. 24-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கும், 25-ந் தேதி இரவு பஞ்சபிரகார புறப்பாடும் நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 7 மணிக்கு விடையாற்றி மற்றும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
- எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
- கல்யாணம், ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் கால சம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை கட்டியணைத்ததாகவும். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது.
பின்னர் மனித இனம் இறப்புகள் இன்றி பூமியின் பாரம் அதிகரிக்க அதனை தாங்க முடியாமல் பூமா தேவி சிவனிடம் வேண்டுகோள் வைக்க, பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தாக வரலாறுகள் கூறுகின்றன.
இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள், 60, 70, 80 கல்யாணம் ஆயூஷ் ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து, சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இந்த கோயிலில் மட்டுமே ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இத்தகைய பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆலயத்தின் வரலாற்றை விளக்கும் வகையில், சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் எமன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கிய பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான எமனை சிவபெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதனையொட்டி கால சம்ஹாரமூர்த்தி, பாலாம்பிகையுடன் வீரநடன மண்டபத்திற்கு எழுந்தருளி வீரநடனம் புரிந்தார். பின்னர், எமன் எருமைக்கடா வாகனத்தில் மார்க்கண்டேயரை துரத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, எமனை இறைவன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதீன 27 மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 18-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர். இதில் விநாயகர் பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளினர்.
நேற்று முன்தினம் இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் சிகர நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் நடைபெற்றது.சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் `அவிநாசியப்பா', `அரோகரா', `நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு வடக்கு ரத வீதியில் நிலை நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.
நாளை 22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 25-ந் தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 26-ந் தேதி மகா தரிசன விழாவும், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. 92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்த படியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும். எனவே தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய இடங்களில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.
- பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.
கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று பிரகாரம் சுற்றி வந்தார். அதனை தொடர்ந்து பட்டத்தரசியாக அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) எழுந்தருளினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-வது நாளான இன்று காலை மரவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். திக்கு விஜயபுராண வரலாற்று நிகழ்வினை குறிக்கும் வகையில் இன்று இரவு திக்குவிஜயம் நடக்கிறது. அரசியான மீனாட்சி இந்திர விமானத்தில் 4 மாசி வீதிகளில் எழுந்தருளி அஷ்ட திக்கு பாலகர்களை போரில் வெற்றி கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரூ.30 லட்சம் செலவில் பல டன் மலர்களால் மணமேடை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்கல்யாண மண்டபம், பக்தர்கள் அமரும் பகுதியில் குளிர்சாதன வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாளை அதிகாலை திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அதிகாலை 4 மணிக்கு கோவில் மண்டகப்படிகளில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் சுவாமி-அம்மன் உலா வருகின்றனர். பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடும் நிகழ்வு நடக்கிறது.
அதனை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முதலில் மணமேடையில் முருகப் பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளுகின்றனர். அதன்பின் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வருகை தருவார்கள். தொடர்ந்து காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்குள் மீனாட்சி திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கிறது.
கோவிலில் நேரடியாக திருக்கல்யாணத்தை காண 12 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி சீட்டு பெற்றவர்கள் 4 கோபுர நுழைவுவாயில் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்திரை வீதிகள் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரை மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை இரவு யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் (21-ந் தேதி) காலை தேரோட்டம் நடைபெறுகிறது.
- காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
- பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்ற நிகழ்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சிகள், பூதவாகனம், அன்னவாகனம், அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், புஷ்ப விமானம் கைலாச வாகன காட்சிகள் நடந்தன.
நேற்று இரவு 10 மணியளவில் பஞ்சமுக 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.
அப்போது வானவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகண பூத வாத்திய இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்குரத வீதி, வடக்கு வீதி கிழக்கு ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி திரு வீதி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு கற்பக விருட்சம் திருக்கல்யாணம் காட்சிகள் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது.
21-ந் தேதி காலை 9 மணி அளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தொலைவு சென்றவுடன் நிறுத்தப்படுகிறது.
22-ந் தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 23-ந் தேதி அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. 24-ந் தேதி அன்று மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும், 25-ந் தேதிதெப்ப தேர் நிகழ்ச்சி நடக்கிறது.
26-ந் தேதி மகா தரிசனம், 27-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
- சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.
ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.
பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
- அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
மதுரையை அரசாள்பவள் சொக்கநாதர் அல்ல; மீனாட்சி அல்லவா. மதுரை மீனாட்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவில் பட்டாபிஷேக விழா கொண்டாடப்படும். சித்திரை முதல் ஆவணி மாதம் வரை மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேசுவரரும் மதுரையை ஆள்வதாக ஆன்மிகப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
மதுரையைத் தவிர இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த மீனாட்சியம்மன் பட்டாபிஷேக விழா, இன்று.
இந்த பட்டாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்தக் காலத்தில், பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்களாக இருந்துள்ளனர். எனவே மதுரையை ஆளும் பாண்டிய நாட்டு மகாராணி மீனாட்சி அம்மனுக்கும் பட்டாபிஷேகம் அன்று அம்மன் சந்நதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனை இருத்தி வைத்து வேப்பம்பூ மாலை அணிவிக்கப்பட்டு ராயர் கிரீடம் அணிவித்து, அம்மன் கையில் ரத்தின செங்கோல் அளிக்கப்படும்.
- 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டி உள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்க ளில் எழுந்தருளி மாசி வீதிகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய இரவு நேரங்களில் 4 மாசிவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் சித்திரை திருவிழா களை கட்டியுள்ளது.
விழாவின் 6-வது நாளான நேற்று இரவு தங்க-வெள்ளி ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.
7-ம் நாளான இன்று காலை 8 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தரு ளிய சுவாமி-அம்மன் 4 மாசி வீதிகளில் உலா வந்து கோவிலில் உள்ள சிவ கங்கை ராஜா மண்டகப்படி யில் எழுந்தருளினார். இன்று இரவு நந்திகேசுவரர் வாகனத்தில் சுவாமியும், யாளி வாகனத்தில் அம்ம னும் எழுந்தருளுகின்றனர்.
ஒவ்வொரு நாள் விழாவும் வாழ்க்கையின் தத்துவத்தையும், பலனையும் எடுத்துகூறும் வகையில் நடந்து வருகிறது.
8-ம் நாளான நாளை (19-ந்தேதி) காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்மன் தெற்காவணி மூலவீதி வழியாக மேலமாசி வீதியில் உள்ள கட்டுச்சட்டி மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நாளை இரவு நடக்கிறது. இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம் நடக்கிறது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனிடம் இருந்து அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனி வேல்ராஜன் செங்கோல் பெறுகிறார். இதற்காக அம்மன் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கிரீடம், ரத்தின செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.
மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை மதுரையில் மீனாட்சி ஆட்சி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.