search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    • மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது.
    • வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த ஆண்டு மே மாதம் கலவரமாக வெடித்தது. அம்மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. சமீபத்தில் மீண்டும் கலவர சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

    இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங்கின் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் லுவாங்ஷாங்பாம் பகுதியில் முதல்-மந்திரி வீடு அருகே வெடிக்காத மோட்டார் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.

    நேற்றிரவு ராக்கெட் மூலம் வெடிகுண்டு வீசப்பட்ட தாகவும், ஆனால் அது வெடிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.
    • மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இந்தியாவில் பழம்பெரும் நடிகர்களுள் ஒருவர் ராஜ் கபூர். இவரின் குடும்பத்தை சேர்ந்த ரன்பிர் கபூர், கரீனா கபூர் ஆகியோர் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

    ராஜ் கபூர் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி பிறந்தார். இந்நிலையில் ராஜ் கபூரின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பம் விமர்சையாக கொண்டாடியது.

    இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பின்னர் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரீனா கபூர், சைஃப் அலிகான் உள்ளிட்ட ராஜ் கபூர் குடும்பத்தினரிடம் மோடி புகைப்படம் எடுத்து கொண்டார்.

    இந்நிலையில், கரீனா கபூர் குடும்பத்தை நேரில் சென்று பிரதமர் மோடி சந்தித்ததை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை பிரதமர் மோடி கரீனா கபூர் என்று நினைத்து விட்டார் போல" என்று தெரிவித்துள்ளார்.

    பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனையடுத்து மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் இப்போதுவரை மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்று விஜய் தெரிவித்தார்.
    • ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? என அண்ணாமலை கேள்வி

    "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அந்நிகழ்வில் பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருக்கு மணிப்பூரை சுற்றிக்காட்டுவதற்கு நான் தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தெரிவித்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ""அடிப்படை அரசியல் அறிவை த.வெ.க. தலைவர் விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆதாரத்தின் அடிப்படையில் விஜய் பேச வேண்டும். மணிப்பூர் பற்றி விஜய் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் அதிகமானோர் இறந்தார்கள்? மணிப்பூரில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். ஆனந்த் டெல்டும்டேவுக்கு விகடன் மேடை கொடுத்தது ஏன்? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்? விசிக யார் கையில் உள்ளது? விசிக திருமா கையில் உள்ளதா, துணைப் பொதுச் செயலாளர் கையில் உள்ளதா? விசிகவிற்கு ஒரு தலைமையா அல்லது இரண்டு தலைமைகளா? ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்?" என்று தெரிவித்தார். 

    • மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
    • மணிப்பூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெல்லி அணி 11 வீரர்களையும் பந்துவீச வைத்து சாதனை படைத்துள்ளது. சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தான் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் முதலில் பந்துவீசிய மணிப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணி கேப்டன் ஆயுஷ் பதோனி வழக்கத்திற்கு மாறாக யுத்தி அமைத்து செயல்பட்டார். விக்கெட் கீப்பரான ஆயுஷ் தானும் இரண்டு ஓவர்கள் பந்துவீசினார். இவர் வீசிய 2-வது ஓவர் மெய்டனாக மாறியது.

    டெல்லி அணியின் 11 பந்துவீச்சாளர்கள் மணிப்பூர் அணியை 20 ஓவர்களில் 120 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதில் மணிப்பூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் 11 வீரர்களையும் பந்துவீச செய்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி 11 வீரர்களையும் பந்துவீச செய்தார். இந்த போட்டி 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது. 

    • மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
    • மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின மக்கள் என்ற அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கு மணிப்பூரில் வாழும் பாரம்பரிய குகி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு இன மக்களுக்கும் சிறு சிறு மோதல்கள் நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

    இந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் வன்முறை வெடித்தது. அன்று இரவு குகி பழங்குடியினத்தை சேர்ந்த 10 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து குகி பழங்குடியின மக்கள் ஆத்திரம் அடைந்து தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இனக் கலவரம் அதிகரித்து பொது சொத்துக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வீடுகளுக்கு தீ வைப்பது, இரு சமூகத்தினருக்கு இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த நேற்று (18.11.2024) மத்திய அரசு கூடுதலாக 50 கம்பெனிகள் மத்திய படையை அனுப்பியுள்ளது.

    புதிய அரசு பதவியேற்றப் பிறகும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இரு பிரிவினருக்கு இடையே தொடர்ந்து கலவரம் நடப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

    2008-2009ம் ஆண்டுகளில் இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்தப்பட்டபோது, அப்போதைய மத்திய, மாநில அரசுகள் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது. அதுபோல் இல்லாமல், தற்போது மணிப்பூரில் நடைபெறும் இனக்கலவரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை இனியும் காலம் தாழ்த்தாமல் எடுத்து மக்களையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.
    • இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு இருந்த பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிபந்தனையுடன் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சாமானிய மக்கள், சுகாதார வசதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது பிராட்பேண்ட் சேவைகள் மட்டும் வழங்கப்படும் நிலையில், மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. வன்முறை அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி ஏழு மாவட்டங்களில் இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.

    "இணையத் தடை காரணமாக முக்கிய அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு பிராட்பேண்ட் சேவைகளின் விஷயத்தில் இடைநீக்கத்தை நிபந்தனையுடன் நீக்கும் முடிவை எடுத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

    ஒரு சந்தாதாரர் அனுமதிக்கப்பட்ட இணைப்பைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார், மேலும் வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது. மேலும் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    • வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நிலவி வந்த மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பெரும் கலவரத்திற்கு பிறகு, பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு வன்முறை ஓரளவு தணிந்தது. எனினும் குகி மற்றும் மெய்தி இனத்தை சேர்ந்த குழுக்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜிரிபம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மந்திரி, எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வன்முறை மற்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


    இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கூடுதலாக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் காங்போப்கி, சுராசந்த்பூர் மாவட்டங்களில் இணையதளம், மொபைல் டேட்டா சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவையும் மீறி இன்று ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மணிப்பூரில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் பாதுகாப்பு படையினரின் நிலைநிறுத்தம் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். மேலும் அங்கு கூடிய விரைவில் அமைதி மற்றும் சட்டம்ஒழுங்கை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே வடகிழக்கு மாநிலத்தின் தற்போதைய "கொந்தளிப்பான" சூழ்நிலையை கையாள்வதில் மாநில அரசுக்கு உதவுவதற்காக சுமார் 5 ஆயிரம் துணை ராணுவப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் சித்தார்த் மருதுள் வருகிற 21 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இதையடுத்து அந்த இடத்திற்கு டி கிருஷ்ணகுமார் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    தலைமை நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் இந்த முடிவு குறித்து இன்று அறிவித்தது. இது குறித்து கொலிஜியம் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் திரு. டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலம், "நீதிபதி திரு. டி. கிருஷ்ணகுமார் 07 ஏப்ரல் 2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 21, 2025 அன்று முடிகிறது. அவர் தனது உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்."

    "உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கும் முன்பு, உயர் நீதிமன்றத்தில் சிவில், அரசியலமைப்பு மற்றும் சேவை விஷயங்களில் நிபுணத்துவம் மற்றும் விரிவான பயிற்சி பெற்றுள்ளார்," என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உயர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் தேர்தல் பேரணிகளை ரத்து செய்த அமித் ஷா அவசர கூட்டத்தை கூட்டியிருந்தார். கூட்டத்தில், மணிப்பூரில் உள்ள பாதுகாப்பு நிலைமையை உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததோடு, அமைதியை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரத்தால் திக்குமுக்காடி வரும் மணிப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
    • மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

    மும்பை:

    மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மணிப்பூரில் மீண்டும் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சக அதிகாரிகள், ராணுவப்படை அதிகாரிகள் ஆகியோருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

    மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நீண்ட கால திட்டங்கள் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.

    • உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன

    மணிப்பூரில் கடந்த வருடம் தொடங்கிய கலவரத்தின் நீட்சியாக கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

    31 வயது ஆசிரியை ஒருவரை உயிருடன் தீ வைத்து எறிந்தனர். தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அன்று ஜிர்பாம் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகினர். தீ வைத்து எரிக்கப்பட்ட 2 மெய்த்தேய் முதியவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமானவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன.

    இன்றைய தினம் மேலும் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த 6 உடல்களும் மாயமானவர்களின் உடல்கள் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த செய்தி பரவியதால் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு கூடுதல் காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது., இம்பாலில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலைகளை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 2 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதால் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டது
    • பாதுகாப்பு படைக்கு அனைத்து அதிகாரமும் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    இனக்கலவரத்தால் துண்டாடப்பட்டு வரும் மணிப்பூரில் ஒரு வருடம் ஆகியும் இயல்பு நிலை திரும்பவில்லை. குக்கி மற்றும் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள கிராமங்களை எரித்தும் மக்களை கொலை செய்தும் கடத்திச் செல்வதுமாக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த வாரம் முதல் தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிர்பாமில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

    மேலும் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது ஆசிரியை ஒருவரை சித்ரவதை செய்து உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த திங்களன்று ஜிர்பாம் பகுதியில் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காணாமல் போயினர். உயிருடன் எரிக்கப்பட்ட இரண்டு மெய்த்தேய் முதியவர்களின் சடலமும் அன்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அவர்கள் கடத்தப்பட்டு 5 நாட்கள் கழித்து, காணாமல் போனவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரின் உடல்கள் மணிப்பூர்-அசாம் எல்லையின் ஜிரி நதி மற்றும் பராக் நதி சங்கமிக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அசாம் சில்கார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே சில்கார் மருத்துவமனைக்கு 3 பெண்களின் உடல்களும், மேலும் 1 பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாக என்டிடிவி களத் தகவல் தெரிவிக்கிறது. அழுகிய நிலையில் உள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    கடத்தப்பட்ட 6 பேரில் லாய்ஷராம் ஹெரோஜித் என்ற மாநில அரசு கீழ்நிலை ஊழியரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவியின் சகோதரி ஆகியோர் அடங்குவர். எனவே உடல்களை அடையாளம் காண அவர் விரைத்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் மெய்த்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கூடுதலாக 2000 மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

    மேலும் மணிப்பூரில் உள்ள அனைத்து பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளனர் என்றும் அமைதியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மணிப்பூரில் 6 மாவட்டங்களில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பு படை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கும் AFSPA சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது

    ×