என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆப்கானிஸ்தான்
- ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர்.
- பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்தது. பல்கலைக்கழகங்களில் பாலினக் கலப்பைத் தடுக்க இந்த தடை அவசியம் என்று தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் நிடா முகமது நாதிம் வாதிட்டார். மேலும் சில பாடங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, அவை சரிசெய்யப்பட்டவுடன் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மூத்த ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர். எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
ஆனால் தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான தடையை மேலும் வலுப்படுத்தியது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக கூறி உள்ளது. பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாவுல்லா ஹஷ்மி இன்று கூறியிருக்கிறார்.
இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் இந்த உத்தரவை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சில மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்தது. பிற இடங்களில் பிப்ரவரி 27-ல் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவால் கலக்கமடைந்துள்ளன.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- உறை பனியால் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் கடந்த 1½ ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை எந்தவொரு நாடும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்த நாட்டுக்கான சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதோடு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தானில் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டு உணவு பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
ஒருபுறமும் தலீபான்களின் அடக்குமுறை, மறுபுறம் உணவு பஞ்சம் போன்ற நெருக்கடி போன்றவற்றால் 2 கோடிக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த சூழலில் இயற்கையும் தன் பங்குக்கு ஆப்கானிஸ்தான் மக்களை துயரப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக தலைநகர் காபூல் மற்றும் அதனை சுற்றியுள்ள சில மாகாணங்களில் வெப்பநிலை மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என எங்கு பார்த்தாலும் பனித்துகள் குவிந்து கிடக்கின்றன. குளிர் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
உறை பனி மற்றும் கடும் குளிர் காரணமாக கடந்த 9 நாட்களில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் உறை பனியால் ஆடு, மாடு உள்பட 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்ததாக தலீபான் அரசின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில் 'இந்த குளிர்காலம் சமீப காலங்களில் மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. ஆண்டின் இந்த நேரத்தில் வெப்பநிலை சராசரிக்கும் குறைவாக உள்ளது. நாட்டின் வடக்கு பகுதிகளில் மிகவும் குளிரான நிலைமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் வாரத்தில் குளிர் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என கூறினர்.
இதனிடையே பனிப்பொழிவு மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி குழுக்கள் குளிர்காய்வதற்கான எரிபொருட்கள், வெப்பமான ஆடைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. அதே வேளையில் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தலீபான்கள் கடந்த மாதம் தடைவிதித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கடும் சிக்கல் நீடிப்பதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக தலீபான்களின் தடையை தொடர்ந்து ஏராளமான வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் தங்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
- ஆப்கானிஸ்தானில் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது.
பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.
- நபிஜாதா அச்சமற்ற சாம்பியன் என்று முன்னாள் எம்.பி. மரியம் சோலைமான்கில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
- இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியிருப்பதாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
நபிஜாதா அச்சமற்ற சாம்பியன் என்று முன்னாள் எம்.பி. மரியம் சோலைமான்கில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "நபிஜாதா உண்மையான வழிகாட்டியாக திகழ்ந்தவர். வலிமையான, வெளிப்படையாகப் பேசுபவர். ஆபத்து சூழ்ந்தபோதும், நம்பியவர்களுக்காக நின்றவர். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் தனது மக்களுக்காக இங்கேயே தங்கியிருந்து போராடுவதை தேர்ந்தெடுத்தார்" என மரியம் கூறியிருக்கிறார்.
கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் வசித்து வந்த நபிஜாதா (வயது 32), கடந்த 2018ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஏற்கனவே கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வந்தாலும் தலிபான்கள் அதனை பொருட்படுத்துவதாக இல்லை.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது விவகாரங்கள் மற்றும் தலிபான் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் இதனை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது.
- இந்தத் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக வளாகத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கலாம். பலர் காயமடைந்துள்ளனர் எனவும், இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட ஆப்கானிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்தன.
- ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
காபூல்:
தலிபான்கள் ஆட்சி செலுத்தி வரும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகம் முழுவதும் இருந்து தலிபான் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட சவுதி அரேபியா, கத்தார், துருக்கி உள்ளிட்ட நாடுகள்கூட கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ஐ.நா. உயர் தூதர் மார்கஸ் போட்செல் இன்று தலிபான் அரசின் உயர் கல்வித்துறை மந்திரி நிதா முகமது நதீமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பெண்களின் உயர்கல்வி தடை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த தடையை உடனடியாக நீக்கி, பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என ஐநா தூதர் வலியுறுத்தி உள்ளார். இதற்கு மந்திரி நதீம் கூறிய பதில் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. பெண்களுக்கான உயர் கல்விக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்ட பின்னர் உயர்கல்வி மந்திரியை சந்திக்கும் முதல் சர்வதேச அதிகாரி மார்கஸ் போட்செல் ஆவார்.
என்ஜிஓ மீதான தடையை வெளியிட்ட பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனபி, உள்துறை மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் ஆகியோரையும் போட்செல் சமீபத்தில் சந்தித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து விவாதித்தார்.
ஜனவரி 13ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பற்றி விவாதிக்க உள்ள நிலையில், இந்த ஆலோசனைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
- இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே தக்கார் மாகாண தலைநகர் தலுக்கான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
- ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் உச்சக்கட்டமாக ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் வெளிநாட்டு நிறுவனங்களிலும் பெண்கள் வேலை பார்க்கவும் தலிபான் அரசு தடை செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலிபான்களின் இந்த அதிரடி உத்தரவால் கிட்டத்தட்ட தங்களுடைய அனைத்து வேலைகளையும் தன்னார்வ அமைப்புகள் நிறுத்தி விட்டன. இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஐ.நா.வும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. சபையின் உதவித்தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் இந்த வாரம் ஆப்கானிஸ்தான் செல்ல உள்ளார்.
அவர் தலிபான் அரசின் முக்கிய தலைவர்களை சந்தித்து பெண்களுக்கு விதிக்கபட்டுள்ள தடை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பெண்கள் பணிபுரிய தடை தொடர்பாக பொருளாதாரத் துறை மந்திரி கடிதம் அனுப்பி உள்ளார்.
காபூல்:
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலிபான் அரசு தனது கொள்கையில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்ஜிஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பொருளாதாரத் துறை மந்திரி காரி தின் முகமது ஹனிப் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் எந்த ஒரு என்ஜிஓ நிறுவனமாக இருந்தாலும், இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
- பெண்களுக்கான உயர்கல்வி தடைக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியது.
- போராட்டம் நடைபெறுவதால், ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காபூல்:
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில், உயர்கல்வி தடைக்கு எதிராக பெண்கள் இன்று ஹெராத் நகரில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாகாண ஆளுநரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். கல்வி எங்களின் உரிமை என்று முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கலைந்து செல்லாததால், பாதுகாப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால், ஒவ்வொரு வீதியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆண்களின் துணை இன்றி அவர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.
காபூல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பெண்கள் சொல்லொணா துயருற்று வந்தனர்.
இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனையடுத்து நாட்டின் உயர்கல்வித்துறை மந்திரி நேடா முகமது இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ளார். மாணவிகள் கல்லூரி வரும்போது திருமணத்துக்கு செல்வதுபோல் ஆடை அணிந்து வருகிறார்கள். மேலும் ஆண்களின் துணை இன்றி அவர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். எனவே இந்த தடை அவசியமாகிறது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்