சினிமா

`தல 57' படத்தின் பாடல் குறித்து மனம்திறந்த ஹிப் ஹாப் யோகி

Published On 2017-01-25 04:50 GMT   |   Update On 2017-01-25 04:50 GMT
அஜித் நடிக்கும் `தல 57' படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
யோகி பி என்று அழைக்கப்படும் யோகேஸ்வரன் வீரசிங்கம் மலேசிய தமிழ் ஹிப் ஹாப் பாடகர். இவர் அஜித் நடித்து வரும் `தல 57' படத்தின் பாடல் குறித்த புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இவர் தமிழில் விஜய்யின் `குருவி' படத்திலும், தனுஷ் நடித்த `பொல்லாதவன்` படத்திலும் ஹிப் ஹாப் பாடல்களை பாடியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் "எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்" என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது அனிருத் இசையில் `தல 57' படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளதாக சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரே தெரிவித்தார்.

யோகி பி அளித்த தகவல் வருமாறு,

`தல 57' படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் அனிருத் தான் தெரிவிக்க வேண்டும். எனினும் தான் பாடியது ஒரு தனித்துவமான பாடல் என்றும், அதில் ஹிப் ஹாப், இடிஎம் மற்றும் பல இசைகளை கலந்து ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தளிக்கும் என்றும் யோகி தெரிவித்தார். எனவே பாடல் வெளியாகும் வரை நாம் பொறுத்திருக்க தான் வேண்டும் என்றார்.

முன்னதாக அனிருத் கூறுகையில், படத்தின் பாடல்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை நினைவுபடுத்தும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

'வீரம்', 'வேதாளம்' படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் 'தல 57' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். வில்லனாக விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தை ரம்ஜான் வெளியீடாக ஜுன் 23-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News