சினிமா (Cinema)

தனுஷ் வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-03 05:09 GMT   |   Update On 2017-03-03 05:09 GMT
நடிகர் தனுஷ் மீதான வழக்கை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் தனுஷ் பெயரிலான பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே பள்ளி மாற்றுச்சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த 28-ந்தேதி மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் ஆஜரானபோது, அவருடைய உடலில் அங்க மச்ச அடையாளங்களை டாக்டர் கள் குழுவினர் சரிபார்த்தனர். பின்னர் அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதித்துறை பதிவாளருக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது, மேலூர் தம்பதி தரப்பில் வக்கீல் டைட்டஸ் ஆஜராகி, “தனுஷின் பெற்றோர் யார் என்பதை கண்டுபிடிக்க வசதியாக அவருக்கு மரபணு பரிசோதனை செய்யக்கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளோம். அந்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் சுவாமிநாதன், “மரபணு பரிசோதனை கேட்கும் மனுவின் மீது மேம்போக்காக உத்தரவிட முடியாது. அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான முகாந்திரம் இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி விரிவாக விவாதிக்க வேண்டும். அப்போது தான் மரபணு பரிசோதனை தேவையா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும்” என்று வாதாடினார்.

இதைத்தொடர்ந்து, மேலூர் தம்பதியின் வக்கீலிடம் “நீங்கள் ஏன் ஆரம்பத்திலேயே மரபணு பரிசோதனை செய்யும்படி கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. இவ்வளவு நாட்கள் கழித்து ஏன் கேட்கிறீர்கள்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், “தேவையான ஆவணங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் தான் இப்போது கேட்கிறோம்” என்றார்.

பின்னர் ‘இதுதொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயார்’ என்று இருதரப்பு வக்கீல்களும் நீதிபதியிடம் கூறினார்கள்.

அதற்கு நீதிபதி, “நான் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இனி வேறு நீதிபதி தான் விசாரிப்பார். எனவே அவரிடம் விவாதத்தை நடத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

பின்னர், ‘இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கதிரேசன்-மீனாட்சி தம்பதியினரின் மனுவை மேலூர் கோர்ட்டு விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் விசாரணையை 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Similar News