சினிமா (Cinema)

`பாகுபலி-2' படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டியது யார்?

Published On 2017-05-12 07:15 GMT   |   Update On 2017-05-12 07:15 GMT
எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்து வரும் `பாகுபலி-2' படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டியது யார் தெரியுமா?
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்டான வசூலை குவித்து வரும் படம் `பாகுபலி 2'. கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை ரூ.1227 கோடி வசூலை குவித்து இந்திய சினிமாவில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல கோடிகளை வசூலித்து ரூ.1500 கோடியை எதிர்நோக்கி பயணித்து வருகிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் சோபு யார்லகடா, பிரசாத் தேவனேனி ரூ.230 கோடியில் தயாரித்திருந்தனர்.

இவ்வாறு 5 வருட முயற்சிக்கு பிறகு வெளியான இப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் இப்படத்தின் மூலம் என்ன லாபத்தை பெற்றனர், அவர்களது சம்பளம் எவ்வளவு என்பதை ஊகிக்க முடியுமா? அதனை கீழே பார்ப்போம்.



5 வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பாகுபலிக்காக தன்னை முழுவதுமாக அர்பணித்த அமரேந்திர பாகுபலி மற்றும் சிவுடு என்ற மகேந்திர பாகுபலியான பிரபாஸீக்கு ரூ.25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸீக்கு அடுத்தபடியாக, ஒரு ஆக்ரோஷ வில்லனாக அனைவரையும் கவர, தனது உடற்கட்டுக்களை மெருகேற்ற தன்னைத் தானே வருத்திக் கொண்ட பல்லாலதேவனான ராணாவுக்கு ரூ.15 கோடிகள் வழங்கப்பட்டுள்ளதாம்.

அனுஷ்கா மற்றும் தமன்னா இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தலா ரூ.5 கோடியை பெற்றிருக்கின்றனர்.



இவர்களுக்கு அடுத்தபடியாக ராஜமாதாவாக தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.2.5 கோடியும், பாகுபலி தொடரின் இணைப்புக்கு ஆதரமாக விளங்கிய கட்டப்பா சத்யராஜுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

இவர்கள் அனைவரையும் தவிர்த்து, இந்த படம் உருவாக மூளையாக செயல்பட்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ரூ.28 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், படத்தின் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கும் அவருக்கு வழங்கப்படுகிறது.

பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலி-2 தற்போது வரை ரூ.1227 கோடி வசூல் செய்திருக்கிறது. 

Similar News