சினிமா (Cinema)

அமலாபால் சொகுசு கார் விவகாரம்: விசாரணை நடத்த கிரண்பெடி உத்தரவு

Published On 2017-10-31 06:00 GMT   |   Update On 2017-10-31 06:00 GMT
புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்ததன் மூலம் அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க போலீசாருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டு பிரபல நடிகை அமலாபால் வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கினார். இந்த காரின் விலை ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும். இந்த காரை புதுவை திலாஸ்பேட்டை செயிண்ட் தெரசா வீதி என்று போலியாக முகவரி கொடுத்து புதுவை போக்குவரத்து அலுவலகத்தில் நடிகை அமலாபால் பதிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்பின் அந்த காரை கேரளாவுக்கு கொண்டு சென்று அவர் பயன்படுத்தி வருகிறார். வேறு மாநிலத்தில் பதிவு செய்து இருந்தாலும் கேரளாவிலும் பதிவு செய்யவேண்டும் என்று அங்கு வாகன சட்டம் உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை அமலாபால் சுமார் ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுதொடர்பாக புதுவை போலீசார் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த போலீஸ் சூப்பிரண்டுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘கேரளாவில் அந்த காருக்கு ரூ.20 லட்சம் வரியாக செலுத்த வேண்டும். ஆனால் புதுவையில் ரூ.1.12 லட்சம் மட்டுமே வரியாக செலுத்தப்படுகிறது. வெளி மாநிலத்தவருக்கு ஏன் இவ்வளவு குறைவான வரியை விதிக்கவேண்டும்? வேறு எந்தெந்த சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதேபோல் புதுவையில் கார்களை பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வருவாய் இழப்பு, மோசடிக்கான முகாந்திரங்கள் உள்ளன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Similar News