நடிகர் சிரஞ்சீவிக்கு இந்திய திரைப்பட ஆளுமை விருது- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கினார்
- தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது.
- அரசியலில் இருந்து திரும்பிய பிறகு ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஆந்திர திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.
விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி ஐ.எஃப்.எஃப்.ஐ, மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் கூறியுள்ளதாவது: கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்று என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன்.
அரசியலில் இருந்து திரும்பிய பிறகு என்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் ஆதரவிற்கும், அரசு மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.