நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார்.
- தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புஷ்பா படத்தில் நடித்து பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுன் கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் நந்தியாலா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ கிஷோர் ரெட்டியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார்.
அல்லு அர்ஜுன் வந்துள்ள தகவல் அறிந்து வீட்டின் வெளியே பெருங்கூட்டம் கூடியது. இதனால் தேர்தல் விதியை அல்லு அர்ஜுன் மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து தன்மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும்படி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனுதாக்கல் செய்தார். மனுவில், 'எனக்கு பல வருடங்கள் நெருக்கமான நண்பராக இருக்கும் கிஷோர் நந்தியாலா தொகுதியில் போட்டியிட்டதால் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றேன்.
நான் வந்து இருப்பதை அறிந்து ரசிகர்கள் திரண்டு விட்டனர். அப்போது எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. எனவே தேர்தல் விதியை நான் மீறியதாக சொல்வது சரியல்ல. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.