சினிமா செய்திகள்

ஆதிபுருஷ் வசனத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நேபாள தலைநகரில் இந்தி படங்களை திரையிட தடை

Published On 2023-06-19 14:17 GMT   |   Update On 2023-06-19 14:17 GMT
  • 17 திரையரங்கங்களின் வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
  • ஜானகி இந்தியாவின் மகள் எனும் வசனம் நீக்கப்படும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் புராணங்கள், "ராமாயணம்" மற்றும் "மகாபாரதம்". இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும். இந்தியாவெங்கும் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில், பல திரைப்படங்கள் வந்து அவை பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன.

கடந்த வாரம், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்த "ஆதிபுருஷ்" எனும் திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால், இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.

ஆனால், இத்திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பல இடங்களில் திரையரங்க வாசல்களில் போராட்டங்களும் நடைபெறுகின்றன. சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது.

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும், சுற்றுலா தலமான பொகாராவிலும், இத்திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை காரணமாக எல்லா இந்தி திரைப்படங்களுமே தடை செய்யப்பட்டுவிட்டன. 17 திரையரங்கங்களின் வாசலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு இந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.

"ஜானகி இந்தியாவின் மகள்" எனும் வசனம் இந்தியாவிலும், நேபாளத்திலும் இப்படத்திலிருந்து நீக்கப்படும் வரையில் எந்த இந்தி திரைப்படமும் காத்மாண்டு பெருநகரத்தில் திரையிட அனுமதி இல்லை", என மேயர் பாலேந்திர ஷா தெரிவித்தார். இது குறித்த ஷாவின் முகநூல் பதிவிற்கு பரவலான ஆதரவும், ஒரு சிலரின் எதிர்ப்பும் காணப்படுகிறது. மேயரின் உத்தரவை நிறைவேற்றுவதாக கூறிய காத்மாண்டு பெருநகர காவல்துறை தலைவர் ராஜு பாண்டே, இதனை உறுதி செய்வதற்காக திரையரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதே போன்று "இன்று முதல் அத்திரைப்படம் திரையிட அனுமதியில்லை" என பொகாரா நபர மேயர் தனராஜ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகள் வலுவடைந்திருக்கும் நிலையில், படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா கூறுகையில், "திரைப்படத்தை உருவாக்கியவர்கள், பல வசனங்களில் மாற்றம் செய்வதாக தெரிவித்திருக்கிறார்கள். இவை ஒரு வார காலத்திற்குள் நடைபெற்று திரையரங்கங்களில் திரையிடப்படும்" என்றும் தெரிவித்தார்.

பிரபலமான டி-சீரிஸ் நிறுவனம், ரெட்ரோஃபைல்ஸ் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள "ஆதிபுருஷ்" திரைப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக இந்தி நடிகர் சாய்ஃப் அலிகானும், இலக்குவனாக சன்னி சிங்கும், மற்றும் அனுமனாக தேவதத்தா நாகேயும் நடித்துள்ளனர். 

Tags:    

Similar News