சினிமா செய்திகள்

நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகி: மலையாள பழம்பெரும் நடிகை கோமளம் மரணம்

Published On 2024-10-18 06:04 GMT   |   Update On 2024-10-18 06:04 GMT
  • தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் வெளிவந்த எம்.ஜி.ஆர்-ன் சகோதரர் சக்ரபாணி நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
  • நடிகை கோமளம் தனது 35-வது வயதில் சந்திரசேகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மலையாள திரையுலகை சேர்ந்த பழம்பெரும் நடிகை கோமளம். கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சேர்ந்த இவர் தனது 96-வது வயதில் காலமானார்.

இருதய கோளாறால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், பாறசாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 15-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பிரபல நடிகையான கோமளம், 1951-ம் ஆண்டு சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார். "வனமாலா" என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். சினிமாவில் நடிக்க பெண்கள் தயங்கிய காலக்கட்டத்தில் சினிமா துறைக்கு பல்வேறு தடைகளை தாண்டி நடிக்க வந்தார்.

பின்பு குடும்பம் மற்றும் சமூகத்தின் எதிர்ப்பு காரணமாக கோமளத்தின் நடிப்பு வாழ்க்கை பாதியில் நின்றது. இதனால் 1951 முதல் 1955-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளே சினிமாவில் நடித்தார். 1954-ம் ஆண்டு நாகூர் இயக்கிய தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியில் வெளிவந்த எம்.ஜி.ஆர்-ன் சகோதரர் சக்ரபாணி நடித்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

நடிகை கோமளம் தனது 35-வது வயதில் சந்திரசேகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 ஆண்டுகளிலேயே கணவரை இழந்த அவருக்கு குழந்தை இல்லை. 1955-ம் ஆண்டு நடித்த "நியூஸ்பேப்பர் பாய்" என்ற திரைப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

பிரபல நடிகர் பிரேம் நசீரின் முதல் படமான "மருமகள்" என்ற படத்தில் கோமளா கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் நடிகர் பிரேம் நசீரின் முதல் கதாநாயகி என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News