பாலியல் புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லையென போலீசார் அறிக்கை- நிவின் பாலி பதிவு
- துபாய் ஓட்டலில் வைத்து நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.
- தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிவின் பாலி மறுத்தார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரங்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அம்பலமாக்கியது. அதன் தொடர்ச்சியாக பல நடிகைகள் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர்.
இதனையடுத்து, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி துபாய் ஓட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் நிவின் பாலி மீது வழக்கு பதியப்பட்டது.
தன் மீது புகார் கூறிய அந்த பெண் யார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பெண்ணை தான் சந்தித்ததே இல்லை என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார்.
மேலும் புகார் கூறிய பெண் தனது குற்றச்சாட்டில், குறிப்பிடப்பட்டிருந்த நாளில் தான் துபாயில் இல்லை எனவும், கேரளாவில் இருந்ததாகவும் தெரிவித்த நிவின் பாலி அதற்குரிய ஆதாரங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில், பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறப்படும் இடத்தில் நிவின் பாலி இல்லை. அவரது பயண விபரங்கள், க்ரெடிட் கார்டு பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, "என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லா அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்று நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.