சினிமா செய்திகள்

பாலியல் புகார்: கேரள ஐகோர்ட்டில் நடிகர் சித்திக் முன்ஜாமீன் மனு

Published On 2024-09-03 05:42 GMT   |   Update On 2024-09-03 05:42 GMT
  • குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.
  • சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

படப்படிப்பு தளம் மற்றும் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கியிருந்தபோது பல நடிகைகள் சந்தித்த பாலியல் பிரச்சினைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் பல நடிகைகள் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக தெரிவித்தனர்.

இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி, அனைத்து திரையுலகத்தினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகைகள் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் புகாரை பெற்றனர்.

அதன்பேரில் நடிகர்கள் முகேஷ், சித்திக், மணியன் பிள்ளை ராஜூ, ஜெயசூர்யா, எடவேள பாபு இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிந்தனர்.

அந்த வழக்கில் இருந்து தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நடிகர் முகேஷ், காங்கிரஸ் நிர்வாகி வி.எஸ். சந்திரசேகரன், நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜூ, எடவள பாபு ஆகியோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோன்று நடிகர் சித்திக்கும் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நடிகை ஒருவரின் புகாரின் பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீசார், அவர் மீது கற்பழிப்பு (376), கொலைமிரட்டல் (506) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News