சினிமா செய்திகள்

வைரமுத்து

இந்த உலகில் தகுதி உள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும் -கவிஞர் வைரமுத்து பேச்சு

Published On 2023-03-09 10:28 GMT   |   Update On 2023-03-09 10:28 GMT
  • தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது.
  • இதில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகதிருவிழா நடைபெற்று வருகிறது. மகளிர் தினவிழாவை முன்னிட்டு நேற்று கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "நான் முதன்முதலில் வாசித்த புத்தகம், ஏழைபடும் பாடு என்ற பிரெஞ்ச் மொழி பெயர்ப்பு நாவலாகும். தேனி அருகே உள்ள கரட்டுப்பட்டியில் லாந்தர் வெளிச்சத்தில் இரவில் படிக்க தொடங்கிய நான் அதிகாலை சேவல் கூவும் நேரத்தில் வாசித்து முடித்தேன். அன்று என் நெஞ்சில் ஏற்பட்ட புத்தக வாசிப்பு என்ற நெருப்பு எனது 70 வயதிலும் எரிமலையாக எழுந்து நிற்கிறது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழை வாசிக்கவும், எழுதவும், பேசவும், படிக்கவும், பாரம்பரியத்தை அறிந்து கொள்ளவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல புத்தகங்களை சேர்த்து வையுங்கள். தாயின் வழியாகத்தான் குழந்தைகள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக அளவில் புத்தக அச்சடிப்பில் 5-ம் இடத்தில் உள்ளது.

வேட்டை யுகம், வேளாண்மை யுகம், தொழில் யுகம் ஆகியவற்றை கடந்து தற்போது கல்வி யுகத்தில் இருந்து வருகிறோம். இந்த யுகத்தில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே தப்பி பிழைக்க முடியும். பற்றவன், கல்லாதவன் என்ற நிலையானது தற்போது தொழில்நுட்பம் கற்றவன், தொழில்நுட்பம் கல்லாதவன் என்று மாறியுள்ளது. வயது முதிர்ந்த காலத்தில் நம்மை நாமே பராமரித்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்கு தயாராக உள்ளவர்கள் மட்டுமே வாழ முடியும். தொழில் நுட்பத்தை மகனிடம் இருந்தும், பேரன் பேத்திகளிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போதைய கல்வியுகத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் என அனைவரும் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். எழுத்தாளர்களை எந்த குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்வதில்லை. எழுத்தாளராக இருக்கும் ஆண், பெண் அனைவருமே பாவம். பல தடைகளை தாண்டிதான் இவர்கள் எழுத வேண்டியுள்ளது. எழுத்தாளர்கள் எந்த காலத்திலும் கொண்டாடப்பட்டது கிடையாது.

பாரதியார், புதுமைப்பித்தன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு மரியாதை இல்லை. எந்த தேசத்தில் கற்றவர்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு மட்டுமே அறிவுள்ள ஆட்சி நடக்கிறது என்று பொருள். எனவே எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு மரியாதை செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News