நாயகன் மீண்டும் வரான்.. ராணுவ சேவையை முடித்த BTS இசைக்குழு பிரபலம் ஜே -ஹோப் - ரசிகர்கள் உற்சாகம்
- ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துள்ளார்
- ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார்
தென் கொரியாவில் 7 இளைஞர்களால் உருவான BTS இசைக்குழு எல்லைகள் கடந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இந்த கே- பாப் இசைக்கு ரசிகர்கள் அதிகம்.
ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களைக் கொண்ட இந்த இசைக்குழு உலகம் முழுவதும் சென்று தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே தென் கொரியாவில் இளைஞர்கள் கட்டாயம் ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற விதி உள்ளதால் BTS குழுவைச் சேர்ந்தவர்களும் ராணுவ சேவைக்கு சென்றனர். இதில் ஜின்னின் சேவைக் காலம் கடந்த ஜூன் மாதம் முடிந்தது.
தொடர்ந்து தற்போது ஜே-ஹோப் [30 வயது] தனது ராணுவ சேவையை முடித்துக் கொண்டு நேற்று முன் தினம் [வியாழக்கிழமை] வெளியே வந்துள்ளார். கேங்வான் மாகாணத்தில் உள்ள வோன்ஜுவில் உள்ள ராணுவ தளத்தில் தனது சேவையை முடித்துக்கொண்டு அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த அவரை பார்க் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஜின்னும் அங்கு வந்து அவரை வரவேற்றார்.
தொடர்ந்து பயிற்சி குறித்து பேசிய ஜே-ஹோப், ராணுவ சேவையை நல்ல உடல்நலத்தோடு, பாதுகாப்பாக முடித்ததாக தெரிவித்தார். தொடர்ந்து BTS குழு வேளைகளில் அவர் மீண்டும் ஈடுபட உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.