ஆன்மிகம்
நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

நாமக்கல், பரமத்திவேலூர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-05-13 06:56 GMT   |   Update On 2021-05-13 06:56 GMT
நாமக்கல், பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சித்திரை மாத கிருத்திகையையொட்டி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பால், தயிர், மஞ்சள், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் சிலர் கோவிலுக்கு வெளியே நின்றவாறு சாமி தரிசனம் செய்வதை பார்க்க முடிந்தது.

பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரிவடபழனியாண்டவர் கோவில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இந்த கோவில்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

Similar News