சுவாமிமலை அருகே 23 அடி உயர நடராஜர் சிலை வடிவமைப்பு
- இந்த சிலை 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது.
- இந்த சிலை ரூ.4 கோடியில் செலவில் உருவானது.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே திம்மக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தை நடத்தி வருபவர் வரதராஜன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆனந்த தாண்டவம் ஆடும் 23 அடி நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணியை தொடங்கினார். பின்னர் நிதி சுமையால் பணியை தொடர முடியாமல் போனது. பிறகு 2012-ம் ஆண்டு வேலூர் நாராயண சக்தி பீடம் ஒத்துழைப்போடு சிலை வடிவமைக்கும் பணிகளை தொடங்கி முடித்தார்.
இந்த சிலை 23 அடி உயரம், 17 அடி அகலம் மற்றும் 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது. மேலும் 51 சிவ அட்சரத்தை குறிக்கும் வகையில் 51 தீச்சுடர்கள், திருவாச்சியில் 52 சிம்மங்களையும், 56 பூதகணங்களையும், 102 தாமரை மலர்களையும், 2 மகர பறவைகளையும், 34 நாகங்களின் உருவங்களையும் கொண்டுள்ளது.
ரூ.4 கோடியில் செலவில் உருவான இந்த சிலைக்கு நேற்று மாலை திம்மக்குடியில் அபிஷேகம் நடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு நடராஜர் சிலையை பயபக்தியுடன் வணங்கினார்.