வழிபாடு

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு 30 மணி நேரம் காத்திருப்பு

Published On 2022-10-14 05:35 GMT   |   Update On 2022-10-14 05:35 GMT
  • சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.
  • லட்டு கவுண்டர்களில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு பிடித்த மாதமான புரட்டாசி மாதத்தில் சாமி தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டும் சாமியை தரிசனம் செய்வதற்காக திருமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் தரிசனத்திற்கான வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 5 கி.மீ. தாண்டி வரிசை சென்று கொண்டிருக்கின்றது.

பக்தர்களுக்கு போதிய அளவு தங்கும் அறைகள் கிடைக்காததால் நேரடியாக தரிசன வரிசைக்கு பக்தர்கள் சென்று விடுகின்றனர். இதனால் சாமி தரிசனம் செய்ய 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இரவு, பகல் பாராமல் வரிசை சென்று கொண்டிருப்பதால் பக்தர்கள் குளிரில் நடுங்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் தலைமுடிகாணிக்கை செலுத்தும் இடங்களிலும், லட்டு கவுண்டர்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கொண்டு உள்ளனர்.

ஒரு சில பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து முடி காணிக்கை செலுத்தலாம் என முடிவு செய்து இலவச தரிசனத்திற்கு சென்றால் அங்கு 30 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பதி புறப்படுவதற்கு முன்பாக சரியாக திட்டமிட்டுக் கொண்டு தரிசனத்திற்கு வருமாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தாலும் ரூ.300 கட்டண தரிசனம் வி.ஐ.பி பிரேக் தரிசனம் மற்றும் அறக்கட்டளை உள்ளிட்ட தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதனால் உண்டியலில் குறைந்த அளவு வருவாய் கிடைத்தது.

தற்போது பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்ப உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

திருப்பதியில் நேற்று 72,216 பேர் தரிசனம் செய்தனர். 32,388 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News