4 ஆகஸ்ட்2024 ஆடி அமாவாசை: புனித நீராடல், தானம், தர்ப்பணம் செய்வது அவசியம்
- 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
- ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) ஆடி அமாவாசை தினம்.
சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....
1. புனித நீராடல்
2. தானம்
3. தர்ப்பணம்
இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.
இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்றுபடுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.
தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே 4-ந்தேதி நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.
அடுத்து, தானம்...
உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோபேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.
ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை - எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.
இதையடுத்து தர்ப்பணம்...
நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.56 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை 5.32 மணி வரை அமாவாசை திதி நேரம் தான். எனவே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றலாம்.
நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினி போடலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்? இந்த பாவ மூட்டைகளை நீக்க 4-ந்தேதி மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.
சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்ம தர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.
முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும் மற்றும் தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.
அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.