ஆடி அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
- மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
- 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்தியாவில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித ஸ்தலங்களாக காசி, ராமேசுவரம் கருதப்படுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.
தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்று காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரார்த்தனைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் ராமேசுவரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் காலை 4 மணி முதல் 7 மணி வரை திடீரென மழை பெய்தது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இருந்த போதிலும் மழையை பொருட்படுத்தாமல் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மூலம் தங்களது குடும்பம் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். வடமாநிலங்களான குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே ராமேசுவரம் வந்து தங்கி இருந்தனர்.
300-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். அவர்கள் கட்டணமாக ரூ.500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வசூல் செய்தனர். இதேபோல் தனுஷ்கோடியிலும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இலங்கையில் ராவணனை வதம் செய்து விட்டு திரும்பிய ராமபிரான் தனக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்படாமல் இருப்பதற்காக ராமேசுவரத்தில் மணல் லிங்கம் அமைத்து பூஜை செய்தார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமேசுவரத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்று இந்து தர்மம் கூறுகிறது.
ஆடி அமாவாசையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக ஆடி அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.