வழிபாடு

கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை வண்டிவேடிக்கை

Published On 2023-07-25 08:45 GMT   |   Update On 2023-07-25 08:45 GMT
  • சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு.
  • 15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும்.

சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. நவகிரகங்களுக்கும் நாயகி என்பதால் இந்த கோவிலில் கிரகண காலங்களின் போது சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பு. ஆடிப்பெருக்கு நிகழ்வுக்கு பிறகு வரும் 22 நாளும் இங்கு விழாக்கோலம் தான்.ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம், உற்சவம் என அம்மன் கண் கொள்ளா, காட்சியளிப்பாள்.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது.

பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். சேலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சேலத்தில் ஆடி மாதத் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒப்பானது சேலம் கோட்டை மாரியம்மன். சுத்து பட்டு எட்டு ஊர்களுக்கு அவள்தான் கண்கண்ட தெய்வம், ஆடி பதினெட்டு முடிந்து வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் திருவிழா.

சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு. அத்தனைக்கும் தலைமையிடம் கோட்டை பெரியமாரியம்மன். குகை மாரியம்மன், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன் என எல்லாக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் திருவிழா நடைபெறும். ஊரே மிக பரபரப்பாய் இருக்கும் காலம் ஆடி மாதம்.

15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும். பட்டிமன்றங்கள், நாடகங்கள், சினிமா, ஆர்க்கெஸ்ட்ரா என தினம் எதாவது நிகழ்ச்சி இருக்கும். போஸ் மைதானத்தில் அரசு பொருகாட்சி இடம்பெறும். இதுவரை இவ்வளவு பெரிய கண்காட்சியை வேற எங்கும் பார்த்ததில்லை. கண்காட்சியிலும் தினம் ஒரு நாடகம், தினம் ஒரு சினிமாவும் உண்டு.

மாரியம்மன் பண்டிகையில் செவ்வாய் கிழமை சக்தி அழைப்பு மற்றும் உருளு தண்டம், புதன் பூமிதித்தல், வியாழன் வண்டி வேடிக்கை, வெள்ளி வாணவேடிக்கை மற்றும் சத்தாபரண ஊர்வலம், சனிக்கிழமை கம்பம் விடுதல் என ஊரே கோலாகலமாக இருக்கும்.

நையாண்டி மேளம், கரகாட்டம் என கிராமியக் கலைகளும் உண்டு. வண்டி வேடிக்கைதான் ஹைலைட். மக்கள் புராண காட்சிகள் போல அலங்கரிக்கப்பட்ட மின்னொளி வண்டிகளில் குகை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், புலிக்குத்தித் தெரு நண்பர்கள், கார்கானா நண்பர் குழு, ஜிக்க பக்கா நண்பர் குழு என பல பெரிய பெரிய குழுக்கள் இதில் பங்கேற்க சிறந்த அலங்கார வண்டிகளுக்குப் பரிசளிக்கப்படும். இரவு 12 மணிவரை கூட லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்து இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பார்கள்.

சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

Tags:    

Similar News