சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நாளை ஆடித்தபசு காட்சி
- நாளை காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
- நாளை தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 11.40 மணிக்கு மேல் 12 மணிக்குள் தங்கசப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சி கொடுக்கிறார்.
இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.