சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
- சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- நாளை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது.
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்ற நிலையில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.
தேரோட்டம் முடிந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று (திங்கட்கிழமை)அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி, நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சியும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடந்தது.
பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.
திருமஞ்சன தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பின்னர் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை (27-ந் தேதி)பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இத்துடன் ஆனி திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர், துணைச் செயலாளர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை நகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.