திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் தூய்மை பணி
- வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
- திருப்பதியைச் சேர்ந்த பக்தர் கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந்தேதி வரை தங்க விமான கோபுரம் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 6.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
கோவில் மூலவர் சன்னதி, கோவில் வளாகத்தில் உள்ள இதர சன்னதிகள், சுவர்கள், மேற்கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு நாமகொம்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரிமஞ்சள், பச்சைகற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை பொருட்கள் அடங்கிய திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியைச் சேர்ந்த பக்தரும், காணிக்கையாளருமான மணி என்பவர் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலுக்கு 3 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார். அந்தத் திரைச்சீலைகளை கோவில் உதவி அதிகாரி ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.