வழிபாடு

அம்பிகை அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள்பாலித்ததையும்,பெரிய கரக ஊர்வலம் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கரக ஊர்வலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-04-21 04:44 GMT   |   Update On 2023-04-21 04:44 GMT
  • 2 அமாவாசை நாட்களில் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
  • அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். ஆனால் மாசி மாதம் அமாவாசை அன்று மயானக்கொள்ளை விழாவும், சித்திரை மாதம் அமாவாசை அன்று பெரிய கரக ஊர்வலமும் (சித்திரை கரகம்)நடைபெறுவதால், இந்த 2 அமாவாசை நாட்களில் மட்டும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது. சித்திரை மாத பெரிய கரகம் என்பது வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை கோவிலுக்கு அழைத்து வருவதாகும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் சித்திரை மாத அமாவாசையையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் உற்சவ அம்மன், இடது கையில் முருகப்பெருமானை தூக்கியபடியும், வலது கையில் விநாயக பெருமானை பிடித்தபடியும் ஸ்ரீ சண்முக கணநாதா அம்பிகை அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அக்னி குளத்தில் பூங்கரகம் செய்யப்பட்டு, அதை காசி பூசாரி தலையில் வைத்து ஊர்வலம் நடைபெற்றது.

பின்னர் அதிகாலையில் கோவிலுக்கு வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News