பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி எழுதிய அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர்
- ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
- கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.
இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.
தல வரலாறு
அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.
ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.
இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.
இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.
பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.
ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.
அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
ஆலய அமைப்பு
ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.
கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.
ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.
ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.
கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.
ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.