முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
- 10-ம்தேதி அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது.
- 11-ம்தேதி திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புதுக்கடை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 109-வது ஆண்டு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் அருட்தந்தை ஜேசு ரெத்தினம் தலைமையில் கொடியேற்றமும், அவரது தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது. 2-ம் நாளில் காலை 7 மணிக்கு அருட்தந்தை மார்ட்டின் தலைமையிலும், மாலை அருட்தந்தை ஜான் பென்கர் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.
3-ம் நாள் காலை 8.30 மணிக்கு அருட்தந்தை ஜீஸ் ரைமண்ட் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து 11 மணிக்கு அன்பு விருந்தும், மாலை 5.30 மணிக்கு அருட்தந்தை காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஜெபமாலை புகழ் மாலையுடன் தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 4-ம் நாள் காலையில் பங்கு அருட்தந்தை சேவியர் புரூஸ் தலைமையில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கிலத் திருப்பலி நடைபெறுகிறது.
விழாவில் 9-ம் நாள் காலை 8 மணிக்கு அருட்தந்தை பெஞ்சமின் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை அருட்தந்தை விக்டர் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 10-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி இறையியல் கல்லூரி அதிபர் அருட்தந்தை சேவியர் பெனடிக்ட் தலைமையில் விழா நிறைவு திருப்பலியும், காலை 11 மணிக்கு மலையாள திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் அலங்கார தேர் பவணியும் நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் தலைமையில் திருப்பலியும், திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பல் சமய பொதுக்கூட்டமும், தொடர்ந்து இளைஞர் இயக்கம் நடத்தும் திங்கள் நகர் ரிச்சு பாலா நாட்டியாலாவின் நடன நிகழ்ச்சியும், மதுரை மருதுவின் பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவில் நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) அருட்தந்தையர்கள் தலைமையில் நற்செய்தி பெருவிழா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் புரூஸ் தலைமையில் பங்கு மக்கள், விழா குழுவினர், பங்கு பேரவையினர் மற்றும் பக்த சபையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.