சபரிமலையில் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு: தேவசம்போர்டு அறிவிப்பு
- சபரிமலைக்கு ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
- பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்ப சில மாற்றங்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன்கோவிலில் மண்டல பூஜை கடந்த 16-ந்தேதி தொடங்கி யது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், 6 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.
கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை செய்ய தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தற்போது பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதான பகுதியில் உள்ள மேம்பால பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் பக்தர்கள் இந்த மேம்பால பகுதியில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.
இதனை மாற்றுவது குறித்து தேவசம்போர்டு பரிசீலனை செய்து வருகிறது. பதினெட்டாம் படி ஏறி வரும் பக்தர்களை, பாலத்தில் ஏறச்செய்யாமல் நேரடியாக சன்னதிக்கு முன்புறம் அனுப்புவதன் மூலம் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமியை தரிசிக்க முடியும். ஆகவே அந்த முறையை செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது.
இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித் துள்ளார். அவ்வாறு பாலத்தில் ஏறிச் செல்லாமல் பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்பவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதனை செய்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.