வழிபாடு

அருள்மிகு தேசிகநாதர் திருக்கோவில்-சிவகங்கை

Published On 2023-08-23 05:39 GMT   |   Update On 2023-08-23 05:39 GMT
  • ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
  • பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பிறகே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

இங்கு பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும். வகையில் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பிறகு பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோவிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிவாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.

பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரிடம் அணிந்துள்ளது. முதல்பூஜை சூரியனுக்கு. தினமும் இக்கோவிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு யூஜை செய்யப்பட்டு அதன்பிறகே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் சூரக்குடி என மருவியது.

நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரில் நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்..

பார்வதிதேவியின் தந்தை தட்சன். ஒரு யாகம் நடத்தினான் ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார் அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோச்சனம் தந்தார். இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காட்சி தருவார் ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.

பரிகாரம்

குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக, மனகுழப்பம் நீங்கி அமைதி நிலவ இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

திறக்கும் நேரம் காலை 4 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணிவரை.

விழாக்கள்

பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை

Tags:    

Similar News