இன்று சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
- 40 நாட்கள் உபவாசம் இன்று முதல் தொடங்குகிறது.
- திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சென்னை:
இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை லெந்து காலம், தபசு காலம் என்று கூறுவது உண்டு. சாம்பல் புதன் கிழமையான இன்று முதல் இந்த நாட்கள் தொடங்குகிறது.
லெந்து காலத்தில் பிரவேசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று முதல் வரும் 40 நாட்கள் அர்ப்பணிப் போடும், உபவாசத்தோடும் நினைவு கூறுவார்கள். இந்த நாட்களில் தங்களை வெறுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.
கொண்டாட்டங்களை தவிர்த்து பயபக்தியோடு ஆராதனையில் பங்கு பெறுவார்கள். சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த வழிபாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பாதிரியார் சபை மக்களின் நெற்றியில் பூசுவார். சிலுவையின் அடையாளமாக இடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புகழ் பெற்ற சாந்தோம் ஆலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், பெரம்பூர் லூர்து ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதே போல சி.எஸ்.ஐ. இ.சி.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து உள்ளிட்ட திருச்சபைகளில் இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆராதனையில் சிறப்பு செய்தியாளர்கள் `லெந்து காலம்' குறித்து பேசுவார்கள். பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக இது நடைபெறும்.
இதைத் தொடர்ந்து வரும் 6 வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு தவக்காலம் முன்னதாக தொடங்கி விட்டதால் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31-ந்தேதி வருகிறது.