ஆரோவில், உதய தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டு தியானம்
- ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
புதுச்சேரி:
புதுவை அடுத்த விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. உலக மக்கள் அனைவரும் எல்லைகளை கடந்து, சாதி, மதம், இன என பாகு பாடுகளின்றி ஓரிடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது மகான் அரவிந்தரின் கனவு.
ஆரோவில் சர்வதேச நகரத்தின் மூலம் செயல் வடிவமாக்கியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அன்னை என அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் ஆரோவில் சர்வதேச நகரம் கட்டுமான பணிகள் தொடங்கியது. அதனை யொட்டி, ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ந்தேதி ஆரோவில் உதய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரோவில் 57-ம் ஆண்டு உதய தினத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டர் வளாகத்தில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். தீபிழம்பின் ஒளியில் மாத்ரி மந்திர் (அன்னையின் வீடு) தங்க நிறத்தில் ஜொலித்ததை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.