வழிபாடு

சபரிமலை என்று பெயர்வர காரணம் என்ன தெரியுமா?

Published On 2024-11-13 04:22 GMT   |   Update On 2024-11-13 04:22 GMT
  • சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது.
  • கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் தான் கேட்கும்.

கார்த்திகை மாதம் வந்தாலே, ஐயப்பனின் சரண கோஷம் பல இடங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிடும். அந்த ஐயப்பனின் புகலிடமான, சபரிமலை பல சிறப்புகளைக் கொண்டதாக விளங்குகிறது. அதில் சில உங்களுக்காக...


ஐயப்பன் ஆட்சி செய்யும் சபரிமலையோடு சேர்த்து, அதை சுற்றிலும் 18 மலைகள் இருக்கின்றன. அவற்றில் சபரிமலை பீடம் தான் உயர்ந்தது.

ராமாயணத்துடன் தொடர்புடைய மலை இது. இந்த பகுதியில் வாழ்ந்த சபரி என்ற மூதாட்டி, ராமபிரானின் தீவிர பக்தை. அந்த மூதாட்டி, ராமரின் தரிசனம் கிடைக்க வேண்டி நாளும் இறைவனைத் தொழுது வந்தார்.

ராமபிரான் நிச்சயமாக தன்னை சந்திக்க வருவார் என்று அவர் நம்பினார். அப்படி வரும் நேரத்தில் அவருக்கு கொடுப்பதற்காக, வனத்தில் இருந்து கிடைக்கும் பழங்களில் சிறந்தவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

மேலும் அந்த பழம் இனிப்பாக இருக்கிறதா? என்பதை கடித்து ருசிபார்த்து வைப்பார். இந்த நிலையில் சீதையைத் தேடி செல்லும் வழியில் ராமனும், லட்சுமணனும் சபரியை சந்தித்தனர்.

அவர்களுக்கு தான் சேகரித்து வைத்திருந்த பழங்களைக் கொடுத்தார். எச்சில் கனியாக இருந்தாலும், தன் மீதுள்ள பக்தியால் அந்த மூதாட்டி அவ்வாறு செய்தது, ராமரை நெகிழச் செய்தது. ராமரின் தரிசனத்திற்குப் பிறகே அந்த மூதாட்டிக்கு முக்தி கிடைத்தது.

அந்த மூதாட்டியின் பெயரால் வழங்கப்படும் மலையே 'சபரிமலை'. இதில்தான் தற்போது சுவாமி ஐயப்பன் அருளாட்சி செய்து வருகிறார்.

இந்த அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவமிருந்து வழிபட்டனர்.

அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று மும்மூர்த்திகளும் வேண்டினர்.

அதன்படியே அவர்களுக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர்.

அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று, ஒரே சமயத்தில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர்.

அவர்கள் நினைத்தது நிறைவேற அம்பிகை ஆசி கூறினார். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.


புராண காலம் தொட்டு, சபரிமலையின் அடிவாரத்தில் உள்ள பம்பை நதிக்கரையில், முனிவர்கள் பலர் குடில் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் பம்பையில் யாகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இந்த தலம் யாக பூமி என்றும் அழைக்கப்படுகிறது.

இன்றும் கூட இங்கு யாக பூஜை நடைபெறுவதைக் காணலாம். அப்படிப்பட்ட பம்பை நதி, ஒரு பெண்ணாக இருந்தவள். ராமனும், லட்சமணனும் சீதையைத் தேடி பல வனங்களில் சுற்றித் திரிந்தனர்.

அப்போது மதங்க முனிவர் வாழ்ந்த ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த குடிலில் நீலி என்ற பெண்ணும் இருந்தாள். அவள், முனிவருக்கு பணிவிடை செய்து வருபவள். தாழ்த்தப்பட்ட பெண்ணான தனக்கு இறைவனின் தரிசனம் கிடைக்குமா? என்று ஏங்கித் தவித்த அந்த பெண்ணை, தன் அருகே அழைத்து ஆசீர்வதித்தார்.

அதோடு "பிறப்பால் எவரும் உயர்ந்தவரும், தாழ்ந்தவரும் இல்லை. வாழும் வாழ்க்கையில்தான் அவர்கள் உயர்வும், தாழ்வும் இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தனை காலம் சேவையில் கழித்த உன்னைப் போற்றி புகழும் நிலை உனக்கு ஏற்படட்டும்" என்று வாழ்த்தினார்.

அந்த பெண்ணே, அழகான அருவியாக மாறி, புனித நதியாக பாய்ந்தாள். அதுவே தற்போதைய பம்பை நதி. இதனை 'தட்சிண கங்கை' என்றும் அழைப்பார்கள்.

சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கு முன்பு, பம்பை நதிக்கரையில் விளக்கு உற்சவம் நடைபெறும். இதற்கு 'பம்பா உற்சவம்' என்று பெயர்.

Tags:    

Similar News