- தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது.
- ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. குறிப்பாக ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. ஆன்மிக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது.
அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்றும் அழைப்பதுண்டு. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம் ஆகும். இது தமிழ் மாதத்தின் 4-வது மாதமாகும்.
வேத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிக்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது.
ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருடபஞ்சமி என தொடர்ச்சியாக சுப தினங்கள் வந்து கொண்டே இருக்கும். இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர்.
ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மன், வேப்பிலை, மஞ்சள், மற்றும் கூழ் ஊற்றுதல், பெரும்பாலான வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இதன் அறிவியல் அடிப்படை என்பது கோடை காலம் முடிந்து பருவநிலை ஏற்படும் மாற்றம் பலவிதமான நோய்களை கொண்டு வரும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் நோய் கிருமி தடுப்பானாக செயல்படுகிறது. மேலும் கூழ் வகை உணவுகள் உடலுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
பெரும்பாலான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் பால்குடம் எடுத்தல், மாவிளக்கு வழிபாடு என பலவிதமாக அம்மனுக்கு வழிபாடு நடைபெறும்.
ஆடி மாத அமாவாசையன்று புனிதநீர் நிலைகளில் நீராடி முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு திதி செய்வார்கள். இதன் மூலம் முன்னோர்கள் ஆன்மா மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது நம்பிக்கை.
ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தில் 18-ம் நாளில் கொண்டாடப்படுகின்றது. இது 18-ம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது.இப்படி அம்மனுக்கு பல விதமாக வழிபாடுகளை கொண்ட மாதமாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பான நாளாக கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு.
இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் விரதம் இருந்து காலை, மாலை வேளைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
அதன்படி ஆடி மாதம் பிறந்ததையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.