வழிபாடு

ஆவணி திருவிழா: திருச்செந்தூரில் இன்று மாலை சண்முகர் சிகப்பு சாத்தி கோலத்தில் வீதிஉலா

Published On 2024-08-30 07:34 GMT   |   Update On 2024-08-30 07:34 GMT
  • ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம்.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையின் கட்டளை மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

8-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

பகல் 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News