ஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
- ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.
வேங்கிக்கால்:
திருவண்ணாலையில் ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். பல லட்சம் பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது.
அரசு, தனியார் பஸ்கள், வேன், கார் மற்றும் ஆட்டோக்கள் என எண்ணில் அடங்காத வாகனங்கள் திருவண்ணாமலை நகரை ஆக்கிரமித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை-செங்கம் சாலை, செங்கம் அருகே உள்ள புறவழிச் சாலை, திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலை ஆகிய வழிதடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அதனை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் திக்கு முக்காடினர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பவுர்ணமி கிரிவலத்திற்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர்.