null
அலைபாயும் மனதை பக்குவப்படுத்தும் ஐயப்பனின் தவக்கோல தரிசனம்
- ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
- எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.
சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.
சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.
எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.
அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.
மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.
அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.
இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.
இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.