திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா
- ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடைபெறும்.
- லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா தொடங்கிய நாள் முதல் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று பகல் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட வசதியாக ஏராளமான மண்பானைகள் கோவில் அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தது. அதனை பெண்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இதேபோல் பொங்கலிடும் இடத்தை பிடிப்பதற்கும் போட்டி இருந்தது. இரவிலேயே இடம் பிடித்து அங்கேயே பெண்கள் படுத்து தூங்கினர். இன்று காலை கோவில் நடை திறந்ததும் அவர்கள் வழிபாடு செய்து பொங்கலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் தொடங்கி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொங்கல் வைத்தனர். திருவனந்தபுரத்தின் முக்கிய சாலைகளிலும் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இதில் ஈடுபட்டனர். இதனால் திருவனந்தபுரம் மற்றும் ஆற்றுக்கால் பகுதிகளில் புகை மண்டலமாகவே காட்சி அளித்தது. திரும்பிய இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமே காணப்பட்டது.