வழிபாடு

கிரக தோஷங்கள் நீங்க... திருப்புல்லாணி வாங்க...

Published On 2024-01-29 05:03 GMT   |   Update On 2024-01-29 05:03 GMT
  • 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம்.
  • விபீஷணன் இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் ஆழ்வார்களில் திருமங்கை யாழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற புகழ் பெற்ற புண்ணிய தலம். இந்த கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் என்ற மூன்று சிறப்புகளுடன் புராணப் புகழ் பெற்றும், சரித்திர புகழுடன் சிறந்த திவ்ய தேசமாக விளங்குகிறது.

விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் ஜெகநாதனை வணங்கி அவரால் கொடுக்கப் பட்ட வில்லைப் பெற்று ராவண சம்ஹாரம் செய்து சீதா பிராட்டியை மீட்க அனுக்கிரகிக்கப்பட்ட தலமாகவும், ராமபிரானை ராவணன் தம்பி விபீஷணன் சரண் அடைந்து இலங்கைக்கு அரசனாக முடிசூடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது.

கடற் கடவுள் தன் பத்தினியோடு ராகவனை சரணடைந்து தன் குற்றம் மன்னிக்கப்பட்ட இடமாகவும், சுகசாரணர்களுக்கு அபயம் அளித்து, புல்லவர், கண்ணுவர் போன்ற முனிவர்கள் ஆதிஜெகநாதரை சரணடைந்து பரமபதம் பெற்ற தலமாகவும் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவில் விளங்குகிறது.

ஆகவே, இந்த தலம் சரணாகதி தருமத்தை அனுஷ்டிக்கூடிய புண்ணிய ஸ்தலமாக திகழ்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திலுள்ள மூர்த்தியை வணங்கி பகவான் பாதம் அடியில் அர்ச்சாரூபியாய் அமர பாக்கியம் பெற்ற பரிசுத்தமான அரசமர நிழலில் நாகப்பிரதிஷ்டை செய்து, நிவேதனம் செய்த பாயாசத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக ஏராளமான தம்பதியர்கள் பெருமாளை தரிசிக்க வரு கின்றனர்.

இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். தாயாருக்கு புடவை சாத்து தலையும், பெருமாள் சாமிக்கு துளசி மாலை அணிவித்தலையும் பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். ராமர் சயன நிலையில் இருப்பது இக்கோவிலின் சிறப்பு அம்சம்.

 எங்கும் காண இயலாத விசேஷ அசுவத்தமும் (அரசமரம்), நாகத்தின் மீது நடமாடும் சந்தானக்கண்ணனும், சிற்பக்கலையின் களஞ்சியமாக கிரீடம், பட்டாக்கத்தியுடன் காட்சியளிக்கும் தர்ப்பசயணன் ராமனும், ரசாயண சத்துக்கள் நிரம்பிய சக்கர தீர்த்தமும் இத்தலத்தின் மாபெரும் சிறப்புக்கு சான்றுகளாய் திகழ்கின்றன.

Tags:    

Similar News